பழுதடைந்த PCR இயந்திரம் திங்கள் முதல் மீண்டும் இயங்கும்

பழுதடைந்த PCR இயந்திரம் திங்கள் முதல் மீண்டும் இயங்கும்-PCR Machine Will Function From Monday-Chinese Embassy In Sri Lanka

- பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது; 100% உறுதிப்படுத்தலின் பின் பணியில்
- பணி மேற்கொள்ளும் மேசையின் நிலையற்ற தன்மையே பிரதான பிரச்சினை

இலங்கையில் பழுதடைந்துள்ள PCR இயந்திரம், நாளை (02) முதல் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.

BGI Genomics எனும் சீன நிறுவனத்தினாலேயே குறித்த PCR இயந்திரம் நிறுவப்பட்டிருந்த நிலையில் அந்நிறுவன தொழில்நுட்ப குழுவினரே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்ட குறித்த இயந்திரம், திடீரென பழுதடைந்தமை காரணமாக, PCR முடிவுகளை பெறுவதில் சிக்கல் மற்றும் தாமதம் ஏற்பட்டிருந்தது.

அதில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதனை நிறுவிய குறித்த நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளர்கள், அவசர வேண்டுகோளின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் வந்தடைந்ததாக, சீனத் தூதரகம் அறிவித்திருந்தது.

 

 

இதனைத் தொடர்ந்து, மேற்கொண்ட 10 மணி நேர முயற்சியை அடுத்து, அதிலுள்ள பிரச்சினைகளை குறித்த தொழில்நுட்பவியலாளர் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.

 

 

ஆய்வுகூட சூழல், குறிப்பாக பணி மேற்கொள்ளும் மேசையின் நிலையற்ற தன்மை உள்ளிட்ட, PCR இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான பல விடயங்களை சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பல சுற்று பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதா என 100% உறுதிப்படுத்தப்பட்டு, நாளை (02) முதல் அது சேவையில் இணைக்கப்படும் என, தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த இயந்திரத்தின் மூலம் இதுவரை 26,000 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனத் தூதரகம், குறித்த இயந்திரம் அவசர தேவையின் அடிப்படையில் சீனாவின் உதவியுடன் கடந்த ஜூன் மாதம் நிறுவப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவ்வியந்திரத்தை நிறுவியுள்ள, BGI Genomics எனும் முன்னணி உயிரியல் தொழில்நுட்ப சீன நிறுவனம், 66 நாடுகளுக்கு தனது உற்பத்திகளை வழங்கி வருவதோடு, சீனா (வூஹான்), ஹொங்கொங், அவுஸ்திரேலியா, சேர்பியா உள்ளிட்ட நாடுகளில் PCR சோதனை கூடங்களை அமைத்துக் கொடுத்துள்ளதாக, சீனத் தூதரகம் அதன் ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளது.

Sun, 11/01/2020 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை