கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் O/L ஒத்திவைப்பு தவிர்க்க முடியாது

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் O/L ஒத்திவைப்பு தவிர்க்க முடியாது-Situation is Critical-OL Exam Will Be Postponed

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

எதிர்வரும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் பாடசாலைகளை திறக்க முடியாது போனால் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனை கருத்திற்கு கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிடலாம். அடுத்தவாரம் இது குறித்து தீர்மானம் எடுப்போமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. மனுக்கல் சமர்ப்பணத்தின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வியில், பாடசாலைகளை திறக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதால் திட்டமிட்டப்படி ஜனவரி 18ஆம் திகதி சாதாரணத்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? என ஆளுங்கட்சி எம்.பி. சாந்த பண்டாரவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சாதாரணத்தர பரீட்சை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். முழு நாட்டில் 10,065 பாடசாலைகள் உள்ளன. ஆனால், அவற்றில் 5100 பாடசாலைகளைதான் திறக்க முடிந்துள்ளது. மேல் மாகாணம் முழுவதும் பாடசாலைகள் திறக்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் பாடசாலைகள் திறக்கப்படவில்லை. சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய மேலும் சில பாடசாலைகள் அதிபர்களின் தீர்மானத்தின் பிரகாரம் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்புலத்தில் சாதாரணத்தரப் பரீட்சைகளை நடாத்துவதில் பிரச்சினைகள் உள்ளன. பரீட்சைக்கான திகதிகளை ஏற்கனவே தீர்மானித்துள்ளோம். 2021ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், இந்நிலைமை தொடர்ந்தால் குறிப்பாக இன்னமும் இரண்டுவாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை திறக்க முடியாத நிலைமை காணப்படுமானால் அல்லது சுகாதாரத்துறையினர் பாடசாலைகளை திறக்க முடியாதென அறிவித்தால் திட்டமிட்ட திகதிகளில் சாதாரணத்தரப் பரீட்சையை நடாத்துவது நீதியானதல்ல.

மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு விருப்பமின்றியேனும் பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிடும். என்றாலும், இன்னமும் அது குறித்து தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் ஒருவாரத்திற்குள் அது குறித்து தீர்மானிப்போம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன்   சுப்பிரமணியம்

Sun, 11/29/2020 - 15:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை