பிரபாகரன் தப்பிவிடுவார் என்றே வெளிநாட்டு கப்பலை நந்திக்கடல் செல்ல அனுமதிக்கவில்லை

மகிந்த சமரசிங்க எம்.பி

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நந்திக்கடல் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதற்காக வெளிநாடொன்று கப்பலை அனுப்ப அனுமதி கோரியிருந்தது.

அனுமதி வழங்கியிருந்தால் புலிகளைச் சேர்ந்தவர்களும் பிரபாகரனும் தப்பியிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருக்கவில்லையென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதிக்கான செலவீனங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்திருந்த நேரத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. தமது பாதுகாப்பு தொடர்பான அச்சத்திலேயே மக்களும் வாழ்ந்தனர். இவ்வாறான நிலைமையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராபக்‌ஷவை மக்கள் தெரிவு செய்தனர்.

இதேவேளை இறுதிக் கட்ட யுத்த காலத்தில் நான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவே இருந்தேன். அப்போது வெளிநாட்டு தூதுவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதில் நாடொன்று நந்திக்கடல் பகுதியில் சிக்கியுள்ள சிவில் மக்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை அனுப்ப அனுமதி கேட்டனர். ஆனால் ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி வழங்கப்படும் போது விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்களும் அதில் தப்பியிருப்பர். அதேபோன்று பிரபாகரனும் தப்பி வெளிநாட்டுக்கு சென்றிருப்பார். அது நடந்திருந்தால் இன்னும் நாட்டில் யுத்தம் இருந்திருக்கும். இந்நிலையில் வெளிநாடுகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் வெளிநாட்டவர்களை மகிழ்விப்பதற்காக ஜெனிவா தீர்மானத்தைத கொண்டு வந்து காட்டிக்கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர். அது தொடர்பாக அப்போதிருந்த ஜனாதிபதிக்கும் தெளிவு இருந்திருக்கவில்லை.

ஆனால் எங்களின் ஜனாதிபதி அமைச்சரவையின் அனுமதியுடன் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து நாட்டை மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் நாங்கள் வெளிநாடுகளுடன் காட்டிக்கொடுப்பு இன்றி நட்புறவுடன் நடந்துகொள்வோம் என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
 

Tue, 11/24/2020 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை