ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மும்மணிகள் சிறப்பு ஆசிர்வாதம்

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை நிறைவுசெய்து இரண்டாவது வெற்றிகரமான வருடத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும், நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவாகி இன்று பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சகல சௌபாக்கியங்களும், நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் மங்காப் புகழும் கிடைக்க வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

covid-19 வைரஸ் கிருமி உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அதனை சரியான விதத்தில் கையாண்டு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக நாட்டின் இருபெரும் தலைவர்களும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். உலகமே பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளை கண்டு வரும் நிலையில் இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிதேனும் குறைத்து விடாது சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் இரு தலைவர்களுக்கும் சகல மதங்களின் ஆசிகள் நிச்சயம் கிடைக்கும் எனவும் மதத்தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் 30 வருட காலமாக நிலவி வந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் தமிழ் மக்கள் ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு இணையாக வாழ வழி வகுத்த பெருமை இந்த இரு தலைவர்களையும் சாரும். நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் தேவைகள் அறிந்து சிறப்பாக பணியாற்றி வரும் அவர்களுக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க வேண்டுமெனவும் மதத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய அங்க ஹாரி கஷ்யப நாயக்க தேரரும், இந்து சமயத்தை சார்ந்த கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்களும், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த கலாநிதி ஹஸன் மௌலானாவும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வண பிதா ஹெட்டியாராச்சியும் இந்த மும்மணிகளின் ஆசிகளை இரு தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளார்கள்.

Wed, 11/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை