பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள்

குடும்பத்துக்கு 5,000 ரூபாவுடன் 10,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள்

பொருளாதார மறுசீரமைப்பு, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதியுள்ள மக்களுக்கு இம்முறையும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.

வைரஸ் தொற்று நோயாளிகளின் நெருக்கமானவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அத்தகைய குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி கிடைக்காதவர்கள் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, தகைமை உள்ளவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி நடவடிக்கைகளுக்காக தேவையான நிதியை திறைசேரி பெற்றுக் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் மேலும் நிதி தேவைப்படுமானால் அதனை பெற்றுக் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று நோயாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு கொரோனா வைரஸ் அற்ற நாட்டை உருவாக்குவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் நேற்று ஆராயப்பட்டுள்ளது.

அதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதற்கான செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், பொலிஸ் நிலையங்கள், பிரதேச சுகாதார சேவை அலுவலகங்கள் மற்றும் கிராமிய குழுக்கள் ஆகியன இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதன்போது பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் மேற்படி வேலைத்திட்டத்தின் ஊடான பிரதிபலன்கள் கிராமிய குழுக்கள் ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர், மின்சாரம், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய வாழ்வாதாரத்திற்கான செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர், தொழில் பாதுகாப்பின்போது சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவது முக்கியம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை