மட்டு. பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்படும்

தனியார் நிறுவனமாக இயங்க அனுமதியில்லை

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக இயங்க அனுமதியளிக்க மாட்டோம். அதனை அரசுக்கு சுவீகரித்து மாணவர்களின் வளத் தேவைக்காக பயன்படுத்துவோமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. மனுக்கள் சமர்ப்பணத்தின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசுக்கு சுவீகரிக்கப்படுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வரையறுக்கப்பட்ட நிறுவமாக 2016.2.09 பதியப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 90 சதவீதமான பங்குகள் ஹிரா மன்றத்துக்கும் 10 சதவீதமான பங்குகள் அஹமட் சிராஸ் ஹிஸ்புல்லாவுக்கும் உரித்துடையதாகவுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 08 பேர் இருந்துள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் 18 பாடவிதானங்கள் முன்னெடுக்கப்படவிருந்தன. பாடவிதானங்களில் ஷரீஆ சட்டம் தொடர்பிலான பாடமொன்றுமுள்ளது. அதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்தான் Bachelor of art Islamic studies. சமகால அரசாங்கம் பட்டங்கள் வழங்கு நிறுவனங்களில் இருந்து இந் நிறுவனத்தை நாம் முற்றாக நீக்கியுள்ளோம். பட்டங்களை வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் அந்நிறுவனத்திற்கு வழங்க மாட்டோம்.

இதன்போது இடையீட்டு கேள்வியை எழுப்பிய காவிந்த ஜயவர்தன எம்.பி.,

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் போது 350இற்கும் அதிகமாக கத்தோலிக்கர்கள் உயிரிழந்ததுடன், இன்றும் 500இற்கும் அதிகமானவர்கள் ஊனமுற்றுள்ளவர்களாக வாழ்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர்தான் ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தாடல்கள் உருவாகின. சஹ்ரான் என்பவர்தான் தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

பயங்கரவாதி சஹ்ரானுடன் நேரடித் தொடர்புகளை பேணியிருந்தவர்தான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா. இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

எம்.எஸ்.டி பாதுகாப்புடன் தான் ஹிஸ்புல்லா நேற்றையதினம் ஆணைக்குழுவுக்கு வந்திருந்தார். அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதா? எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகத்தை உருவாக்க ஹிஸ்புல்லாவுக்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பிலும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சியாகவிருந்த சந்தர்ப்பத்தில் ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தப்படுமென தெளிவாக கூறியிருந்தீர்கள். ஆகவே, இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு சுவீகரித்துக்கொள்வீர்களா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பல்கலைக்கழத்திற்கு உள்ளீர்க்கும் மாணவர்களை இம்முறை அதிகரித்துள்ளோம். கடந்தவருடம் 30ஆயிரம் மாணவர்களே உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால், இம்முறை 40ஆயிரம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதிகமான மாணவர்களை உள்வாங்கும் போது பௌதீக வசதிகள் அவசியமாகும். உட்கட்டமைப்பு வசதிகளும் அவசியமாகும்.

அதன் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதற்காக பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தைவிட இந்த பல்கலைக்கழத்தில் உயர்வான வளங்கள் காணப்படுகின்றன. அதன் பயன்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்திற்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்குதான் இதனை கண்டறியும் முழுமையான பொறுப்பு உள்ளது. இத்திணைக்களத்தின் அனுமதி இல்லாது தனியொரு நபருக்கு இத்தகைய பாரிய நிதி கிடைக்கப்பெறுவது சட்டவிரோதமானதாகும். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். நிதியை கொண்டுவர வேண்டாமென கூறவில்லை. ஆனால், அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இது தான் எமது கொள்கையாகும்.

ஷரீஆ பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாக இயங்கவிடமாட்டோம் என்பதை தெளிவாக கூறுகிறோம். அரசாங்கத்திற்கு சுவீகரித்து மாணவர்களின் வளத் தேவைக்கான பயன்டுத்துவோம்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தெளிவான கொள்கைகள் இருந்தன. ஷரீஆ கல்வி உட்பட பல கல்வி முறைகள் தொடர்பில் தெளிவான திட்டங்கள் இருந்தன. 2015ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டு போதகர்கள் வந்தனர். அவர்களது பின்புலத்தை ஆராயாது ஒன்லைன் விசாக்களை வழங்கினர். எமது காலத்தில் எவ்வாறு விசாக்கள் வழங்கவில்லை. புலனாய்வுத்துறையினர் நன்கு விசாக்களை பரிசீலனை செய்தனர்?எவர் வேண்டுமானாலும் வந்து எந்தவொரு பாடத்தையும் கற்பிக்க கட்டுப்பாடுகற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஷரீஆ சட்டமோ அல்லது வேறு எந்த பாடவிதானமாகவிருந்தாலும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் பாடவிதானங்களுக்குதான் நாம் அனுமதியளிப்போம்.

மீண்டும் இடையீட்டு கேள்விளை எழுப்பிய காவிந்த ஜயவர்தன எம்.பி.,

ஷரீஆ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான அடிக்கல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அடிப்படைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம், சாபி ஷாப்தீனுக்கு எதிராக நடவடிக்கையெடுப்போம் என்றே மக்களிடம் வாக்குகளை பெற்றிருந்தீர்கள். இன்று அனைத்தையும் மறந்துள்ளீர்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசாங்கத்திற்கு ஆதரவுகளை பெற்றுக்கொள்ளவும் இவ்வாறான குழுக்களுக்கு கடந்த காலத்தில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. எமது காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. அதன் பிரதிபலனைதான் இன்று அனுபவிக்கிறோம். இவை அனைத்துக்கும் நாம் இடமளிக்க மாட்டோம் என்பதே எமது பதில் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 11/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை