ஆறு நாடுகள் பங்குபற்றும் கபடி தொடர் ஒத்திவைப்பு

இலங்கையின் மீண்டும் கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதால் இம்மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த ஆறு நாடுகள் பங்குபற்றும் சிக்ஸ் நேஷன்ஸ் கபடி தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருந்த குறித்த தொடரில் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் போட்டிகளை நடத்தும் இலங்கை ஆகிய நாடுகள் கலந்துகொள்ள இருந்தன.

எனினும், இலங்கையில் மீண்டும் கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் குறித்த தொடரில் பங்குபற்றுவதற்கு ஒருசில நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மறுபுறத்தில் இந்திய கபடி சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக இந்திய அணி இந்தத் தொடரில் பங்குபற்ற மாட்டாது என ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, கபடி விளையாட்டில் முன்னணி நாடாக வலம்வந்து கொண்டிருக்கின்ற இந்தியா இந்தத் தொடரில் பங்குபற்றாமை பாரிய பின்னடைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறாயினும், இந்திய கபடி அணியை இந்தத் தொடரில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு கோரி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்பிரதிபலனாக, இந்திய கபடி அணியை அனுப்பி வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருந்ததாகவும் முன்னணி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனாலும், இலங்கையில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதன் காரணமாகவும், வெளிநாட்டு வீரர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை