சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க சகல பாடசாலைகளுக்கும் அனுமதி

கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதற்கான அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து பணியாற்றி வருகிறது. அதற்கான சுற்று நிருபங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தான் பாடசாலைகளின் பாதுகாப்புச் செயற்பாடுகள் சுகாதாரத்துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கொவிட்19 அலையுடன் பாடசாலைகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட வேண்டும், எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெளிவாக அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் கொவிட்19 இரண்டாம் அலையில் நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள படிப்பினைகளின் பிரகாரம் மாற்றமடையும் உலகத்துக்கு ஏற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளையும் மாணவர்களையும் மையப்படுத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எமது மாணிக்கற்களாகும். அவர்களுக்கு கல்வியை கொடுப்பது எமது கடமை என்பதுடன், அந்தக் கல்வியை கொவிட்19 அல்லது வேறு சக்திகளால் கொள்ளையடிக்காது பாதுகாப்பதும் எமது கடமையாகும். அந்த மாணிக்கங்களை பாதுகாக்கும் பிரதான பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது.

சுகாதார நிலைமைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க அனுமதியளிக்க வேண்டும். பெற்றோர், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுக்கள், அதிபர், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், பாடசாலைகளை மையப்படுத்திய சுகாதார அமைப்புகள், போக்குவரத்துத் துறையினர் ஊடாக கலந்துரையாடல்கள் நடத்தி தீர்மானங்கள் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், திம்புலாகலையில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம, திரப்பனை, கல்குடா, கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில்லையென அவர்களே தீர்மானித்துள்ளனர். கிழக்கில் மொத்தமாக 05 பாடசாலைகள் திறக்கப்படுவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகள் திறக்கப்படுவதில்லையென தீர்மானித்துள்ளனர்.

Wed, 11/25/2020 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை