கொரோனா நோயாளருக்கு தனியான சிகிச்சை நிலையம்

பலரும் தப்பியோட முயற்சிப்பதால் பாதுகாப்பு ஏற்பாடு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாகவுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட பாதுகாப்புடன் கூடிய சிகிச்சை நிலையமொன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் போதைப்பொருளுக்கு அடிமையான பலர் இக்காலங்களில் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தொடர்ந்தே இந்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்ணொருவர் தனது குழந்தையுடன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்றும் மற்றுமொரு 22 வயது நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

எவ்வாறெனினும் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினர் அவரை மடக்கிப்பிடித்து மீண்டும் வைரஸ் தொற்று சிகிச்சை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.அவ்வாறு தப்பியோட முயன்ற நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை மாத காலத்தில் இதுபோன்று போதைப்பொருளுக்கு அடிமையான பல வைரஸ் தொற்று நோயாளிகள் தப்பிச் செல்ல முயன்று ள்ளதாக குறிப்பிட்ட அவர் அத்தகையோருக்கு தனியான சிகிச்சை நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையானவராக இருந்தால் குறித்த நபரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர் தொடர்பில் சுகாதாரப் பிரிவு அல்லது பாதுகாப்புப் பிரிவினருக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை