தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி, இந்த டெஸ்ட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் வீரர்களில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடவிருக்கின்ற வீரர்கள் 18 பேர் (13) முதல் கண்டி பல்லேகல மைதானத்தில் 10 நாட்கள் கொண்ட உயிரியல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட பயிற்சி முகாத்தில் பங்கேற்கின்றனர். பின்னர், இந்த பயிற்சி முகாத்தினை தொடர்ந்து குறித்த வீரர்கள் 18 பேரும் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஹம்பந்தோட்டை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாட தெரிவு செய்யப்படாது, தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்காக மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எஞ்சிய இலங்கை வீரர்கள் அனைவரும் கொழும்பில் தனிப்பட்டரீதியில் தமது பயிற்சிகளை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயிற்சிகளின் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி (அதாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியினை அடுத்து) 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் 10 பேர் கொண்ட முகாமைத்துவக் குழுவும் இணைந்து தென்னாபிரிக்கா பயணமாகின்றது.

இந்த டெஸ்ட் தொடரின் போது இலங்கை அணியின் தலைவராக செயற்படப்போகும் டிமுத் கருணாரத்ன மாத்திரமே இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் தென்னாபிரிக்க செல்ல முன்னர் PCR பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்கவிருக்கும் ஒரே வீரராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை வீரர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க மண்ணுக்கு சென்றதன் பின்னர் இலங்கை அணி, தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணியுடன் டிசம்பர் 20ஆம் திகதி பெனோனி நகரில் ஆரம்பமாகும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியொன்றில் விளையாடவிருக்கின்றது. இந்தப் பயிற்சிப் போட்டியினை அடுத்து ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த ஜனவரி 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் தொடரினை அடுத்து, இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் இடம்பெறவிருப்பதனால் இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டின் ஜனவரியில் இலங்கை வந்து இத் தொடருக்காக 7 நாட்கள் காலி நகரில் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்த ஆண்டின் மார்ச் மாதம் விளையாடுவதாக இருந்தது. எனினும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவிருந்த குறித்த தொடர் கொவிட்-19 தொற்று காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட டெஸ்ட் தொடரே அடுத்த ஆண்டின் ஜனவரியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடருக்கான அனுமதி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் இருந்து இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மறுமுனையில் நடைபெறவிருக்கும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரே இலங்கை வீரர்கள் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட பின்னர் விளையாடவிருக்கும் முதல் சர்வதேச தொடராக அமையவிருக்கின்றது. இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்த ஆண்டின் மார்ச் மாதம் விளையாடிய ஒருநாள் தொடரே, இலங்கை கிரிக்கெட் அணியின் கடைசி சர்வதேச தொடராக அமைந்திருந்தது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை வீரர்கள் விளையாடிய பல கிரிக்கெட் தொடர்கள் இரத்துச் செய்யப்பட்ட போதும் இலங்கை அணி வீரர்களுக்குரிய வதிவிடப் பயிற்சிகளை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர் ஒழுங்கு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் கடைசியாக நடைபெற்றிருந்த வதிவிடப் பயிற்சி முகாம் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையில் நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடருக்காக கடந்த ஒகஸ்ட் மாதம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாத்தினை நோக்கும் போது இந்த குழாத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், இந்த டெஸ்ட் தொடரில் இளம் துடுப்பாட்ட சகலதுறைவீரரான சந்துஷ் குணத்திலக்க மற்றும் இளம்வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க ஆகியோர் முதல்தடவையாக இடம்பெற்றுள்ளனர்.

இந்த இரண்டு வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியமைக்காக இலங்கை டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருப்பதோடு, இதில் 20 வயது நிரம்பிய டில்ஷான் மதுசங்க இலங்கை கனிஷ்ட அணிக்காக வெறும் 16 இளையோர் ஒருநாள் போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திறமைகளை வெளிப்படுத்திய ஏனைய இளம் வீரர்களான மினோத் பானுக்க, வனிந்து ஹஸரங்க மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோருக்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும், இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருந்த டியர் ஏ மேஜர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற லஹிரு உதாரவிற்கும், அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய துவிந்து திலகரட்னவிற்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவர்கள் தவிர இந்த டெஸ்ட் குழாத்தில் 9 துடுப்பாட்டவீரர்களும், 3 சகலதுறைவீரர்களும், 7 வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

தற்போது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் அட்டவணையில் 80 புள்ளிகளுடன் காணப்படும் இலங்கை அணி 06ஆம் இடத்தில் இருப்பதோடு, தென்னாபிரிக்க அணி வெறும் 24 புள்ளிகளுடன் 08ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), ஒசத பெர்னாந்து, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஞய டி சில்வா, டசுன் ஷானக்க, மினோத் பானுக்க, சந்துஷ் குணத்திலக்க, வனிந்து ஹஸரங்க, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை