மாவீரர் நாளை வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செய்வோம்

சிவகரன் தெரிவிப்பு

மாவீரர் நாளான நாளை வீடுகளில் மஞ்சள், சிவப்பு கொடிகளையேற்றி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரும், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவருமான எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தமிழீழ மாவீரர் தினம் நினைவேந்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு கூர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது நினைவேந்தலை செய்ய சட்டம் எமக்கு விலங்கிட்டுள்ளது. அதாவது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அஞ்சலி செய்யாதவாறும் அதற்குள் உள்நுழைய முடியாத நிலையிலும் தடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாத மாவீரர்களின் தியாகங்கள் மிகப்பெரியது. எந்த தடைகள் வந்தாலும் இவர்களை மறக்க முடியாதது ஒன்றாகும். அரசு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தமிழ் மக்களின் மனதிலிருந்து மாவீரர்களின் தியாகங்களை நீக்கிவிடவோ அழித்துவிடவோ முடியாது என்றார்.

மன்னார் குறூப், தலைமன்னார் விஷேட நிருபர்கள்

Thu, 11/26/2020 - 15:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை