இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேற்று ட்ரம்ப், ஜோ பிடன்

அமெரிக்காவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந் நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்குகிறார்.

கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் 8 கோடியே 50 இலட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைபோல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்து கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார். இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்துகொண்டு ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஜோ பிடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன.

ஆனால் ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை