ஆளுந்தரப்பு, எதிரணி சபையில் கடும் ஆட்சேபம்

- மாவீரர் தினம் தொடர்பான சிறிதரன் MP யின் உரை
- பாராளுமன்றில் நேற்று கூச்சல்
- குழப்பம் உரையை நீக்கவும் கோரிக்கை

மாவீரர்களை நினைவு கூருவது தொடர்பான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் எம்.பியின் உரைக்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் நேற்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

நிலையியற் கட்டளைகளுக்கு முரணாக அவர் உரையாற்றுவதாகவும் அவரின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென்றும் கோரினர்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன், மாவீரர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

இதன்போதே அரச தரப்பு எம்.பிக்களான மஞ்சுள திசாநாயக்க, பிரகீத் பண்டார, சஞ்சீவ எதிரிமான்ன, தொலவத்தை மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி ஸ்ரீதரன் எம்.பி. யின் உரைக்கு ஆட்சேபனை வெளியிட்டனர். அவரின் உரையின் போது சபைக்கு தலைமை தாங்கிய ஹேஷா விதானகே எம்.பி. விடயத்துக்கு பொருத்தமானவற்றை மட்டும் பேசுமாறு ஸ்ரீதரன் எம்.பியிடம் கோரினார்.

எனினும் ஸ்ரீதரன் எம்.பி தொடர்ந்தும் மாவீரர்களைப்பற்றி பேசியதையடுத்தே ஆளும் எதிர்த்தரப்பு எம்.பிகள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். சஞ்ஜீவ எதிரிமான்ன எம்.பி கூறுகையில் ஸ்ரீதரன் எம்.பியின் உரை தமிழ் இந்து கலாச்சாரத்திற்கு செய்யும் பெரும் அபகீர்த்தியாகும். பிரபாகரனின் பிறந்நாளை கொண்டாட இந்த சபையை பயன்படுத்தாதீர்கள் என்றார்.
எஸ்.ஸ்ரீதரன் எம்.பி கூறுகையில்

இனங்களுக்கிடையில் ஒற்றுமை பேணுவதாக இருந்தால் தமிழ் மக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும்.கடந்த ஆட்சியில் மாவீரர் தினத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

சரத் பொன்சேக்க எம்.பி, கூறுகையில், மாவீரர் தினம் அனுஷ்டிக்க எமது அரசு அனுமதி வழங்கவில்லை.மாவீரர் தினத்தை நாம் அன்றும் இன்றும் நிராகரிக்கிறோம் என்றார்.

ஸ்ரீதரன் எம்.பி பேசுகையில், அவர் தமது இடத்திலிருந்து சிந்திக்கிறார்.தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவு கூர தடைவிதிக்கக் கூடாது என்றார்.

சரத் பொன்சேக்கா எம்.பி,- உறவினர்களை எவருக்கும் கொண்டாடலாம்.மாவீரர் என்று கூறுவது இறந்த புலி உறுப்பினர்களை நினைவு கூருவதை அனுமதிக்க முடியாது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,சுப்ரமணியம் நிசாந்தன்

Fri, 11/27/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை