பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் வந்துள்ளது

தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் வெற்றி உரையில் தெரிவிப்பு

ஆழமாக பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் வந்திருப்பதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜோ பைடன் ஆற்றியுள்ள உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கு வாக்களிக்காத மக்கள், தனக்கு வாக்களித்தவர்களுக்காக வாய்ப்பொன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.

கசப்பான போட்டி நிலவிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடந்த சனிக்கிழமை ஜோபைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில் தேர்தல் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தியுள்ளார். தீர்க்கமான போட்டி நீடித்த பென்சில்வேனியாவில் வெற்றி பெற்ற உடன் ஜனாதிபதியாக வெல்வதற்கு தேவையான 270 தேர்தல் தொகுதி வாக்குகள் என்ற எல்லையை பைடன் கடந்தார். இதன்மூலம் கடந்த நவம்பர் 03 திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு வெளியாகுவதில் நான்கு நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.

வெற்றி உறுதியானதை அடுத்து அமெரிக்காவின் பிரதான நகரங்களில் பைடன் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

“இந்த நாட்டு மக்கள் தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் எமக்கு தெளிவான, உறுதியான வெற்றி ஒன்றை தந்துள்ளார்கள்” என்று தமது சொந்த ஊரான வில்மிங்கடனில் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் முன் பைடன் தெரிவித்தார்.

நாட்டை ஒன்றுபடுத்துவதாகவும், கொவிட்–19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதாகவும் நாட்டின் பொருளாதார சுபீட்சத்தை கட்டியெழுப்புவதாகவும், அமெரிக்க குடும்பங்களுக்கான சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், கட்டமைக்கப்பட்ட இனவாதத்தை வேறருப்பதாகவும் பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

தனது போட்டியாளரான டிரம்பை குறிப்பிட்டு பேசாத பைடன், அவருக்கு வாக்களித்த 70 மில்லியன் அமெரிக்கர்களை நேரடியாக விளித்துப் பேசினார். இந்த தேர்தல் முடிவுக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஜனாதிபதி டிரம்புக்காக வாக்களித்த அனைவரும் இன்று ஏமாற்றம் அடைந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் பல முறை தோற்ற அனுபவம் கொண்டவன். ஆனால் இப்போது அடுத்தவர்களுக்கான வாய்ப்பை வழங்கும் நேரம். ஒருவருக்கு ஒருவர் கோபப்படுவது, கடுமையாக பேசுவதை கைவிட்டு மீண்டும் ஒருவருக்கு ஒருவர் செவிமடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்போது தனது துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கும் கமலா ஹாரிஸை பைடன் அறிமுகம் செய்தார். அவர் அமெரிக்க துணை ஜனாதிபதியாகும் முதல் பெண், முதல் கறுப்பு அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய பூர்வீகம் கொண்டவர் என்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

பைடன் ஒரு குணப்படுத்துபவர் என கூறிய கமலா, கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்த நபருக்குத்தான் மக்களின் தேவை குறித்த ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதல் ஒரு தேசமாக நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும் எனக் கூறி உள்ளார்.

55 வயதான கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு தந்தை ஜமைக்காவை சேர்ந்தவராவார். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.

கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.

“தனி மனுசியாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார் அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்களை, ஆசியர்களை, வெள்ளை இனத்தவர்களை, லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்” என அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.

பைடனில் வெற்றிக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் சான்சலர் அங்கேல மேர்கல் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். பைடன் வெற்றி பெற்றதாக உறுதியானபோது டிரம்ப் கொல்ப் அரங்கில் இருந்தார். இதன்போது அவர், 'வெற்றியாளராக பொய்யாகக் காட்டிகொள்ள விரைகிறார்' என்று பைடன் மீது குற்றம்சாட்டினார். எனினும் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் வழியில் பைடன் ஆதரவாளர்கள் அவரது வாகனத் தொடரணியை மறிக்கும் வகையில் கூடியிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுக்கு எதிராக டிரம்ப் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளார்.

எனினும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதான அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவரது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை