சிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சீன் வில்லியம்ஸ் 75 ஓட்டங்களையும், பிரெண்டன் டெய்லர் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், இப்தீகார் அஹமட் 5 விக்கெட்டுகளையும், மொஹமட் முஸா 2 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவுப், பஹீம் அஸ்ரப் மற்றும் இமாட் வசிம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 35.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவுசெய்தது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், டென்டாய் சீசோரோ 2 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் மற்றும் சிகாண்டர் ராஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக 2 மெய்டன் அடங்களாக 10 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இப்தீகார் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை