ஆணை கோரிய வழக்கு நீதிமன்றால் தள்ளுபடி

வட மாகாண மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

யுத்தத்தில் உயிரிழந்த, கொல்லப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அஞ்சலி செலுத்த முடியும். அதனை எவரும் தடுக்க முடியாது. எனினும் கூட்டாக, மாவீரர் தினமாக அஞ்சலி செலுத்துவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புட்டது. எனவே அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு மாகாண மேல் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து வட மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ, அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தையோ காரணம் காட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நினைவேந்தலை தடைசெய்ய முயற்சிக்கக் கூடாது என வடமாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளையிடுமாறு கோரி வடமாகாண மேல் நீதிமன்றில் (யாழ்.மேல் நீதிமன்று) தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுக்களுக்கே நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக இவ் வழக்கை தாக்கல் செய்திருந்தனர். இவ் வழக்கானது நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மனுத்தாரர் சார்ப்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், கே.சயந்தன், அர்ச்சுனா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

எதிர்மனுத்தாரர் சார்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான அஜித்ரோகன மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்கள அரச சட்டவாதிகளும் முன்னிலையாகியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்ப்பாக முன்னிலையான சட்டத்தரணிகள், இம் மனுவினை விசாரணை செய்வதற்கு இந் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என பூர்வாங்க ஆட்சேபனையை முன் வைத்ததுடன், இவ் விடயம் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைப்பதாகவும், அச்சுறுத்தலானது எனவும் குறிப்பிட்டனர்.

எனவே பயங்கரவாத சட்டத்தின் கீழும், வேறு மத்திய சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைத் தான் இந்த மனுத்தாரர்கள் புரிவார்கள் எனவும் அவர்கள் தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.

இதனை எதிர்த்து மாகாண மேல் நீதிமன்றுக்கு இதனை விசாரணை செய்ய நியாயாதிக்கம் உள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டார். அரசியலமைப்பின் பிராகாரம் மாகாண மேல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட போது மாகாண சபையின் நிரலில் இருக்கக்கூடிய விடயம் தொடர்பாக எவரேனும் ஒருவர் தத்துவங்களை பிரயோகிக்க முனைந்தால், (அது பாராளுமன்ற சட்டத்தின் கீழானாலும் சரி, மாகாண சபை நியதிச் சட்டத்தின் கீழாகவும் இருக்கலாம்) அது சம்பந்தமாக எழுத்தாணை வழங்கும் அதிகாரம் உள்ளது என அரசியலமைப்பின் 154ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த மன்று இது தொடர்பாக நியாயாதிக்கம் உள்ளதா இல்லையா என்பது தொடர்பாக தனது கட்டளையை வழங்குவதற்காக வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்தது. தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு வழக்கின் கட்டளைக்காக எடுக்கப்பட்ட போது, மேற்படி விடயத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு தனியாக அஞ்சலி செலுத்த முடியும். அதனை மன்று ஏற்பதுடன் அதனை எவரும் தடுக்க முடியாது. ஆனால் கூட்டாக சேர்ந்து மாவீரர் நினைவேந்தல் என செய்யப்படுவது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்படுவதாக மன்று ஏற்றுக்கொள்கிறது. எனவே இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்யும் நியாயாதிக்கம் இந் நீதிமன்றுக்கு இல்லை என வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் குறூப், யாழ். விசேட நிருபர்கள்.

 

Sat, 11/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை