கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலையில் உள்ளது

சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்

கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது, ஓரளவு அபாயநிலையில் உள்ளதாக சுகாதார  அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று வரை 409 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில், 401 பேர் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், 8 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 332 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த 34 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே, இவ்வாறு வீடு திரும்பியதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில், 63 ஆயிரத்து 223 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேநேரம், முப்படையினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் 34 தனிமைப்படுத்தல் மையங்களில், 2 ஆயிரத்து 776 பேர் தொடர்ந்தும் தனிமைப்பத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை