பைடன் வெற்றியை நெருங்குகின்ற நிலையில் நீதிமன்றத்தை நாடுகிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:

இழுபறி இடையே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றியை நெருங்கிய நிலையில் அதற்கு முட்டுக்கட்டையாக பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஒருசில மாநிலங்களில் நேற்று மாலை வரை வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 270 தேர்தல் தொகுதிகளை கைப்பற்ற வேண்டி இருந்த நிலையில் நேற்று மாலைவரை ஜோ பைடன் 264 இடங்களை வென்று வெற்றியை மிக நெருங்கியுள்ளார். டிரம்ப் 214 இடங்களையே வென்றுள்ளார்.

முக்கிய மாநிலங்களான விஸ்கொன்சின், ஜோர்ஜியா, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் வாக்கு எண்ணும் நடவடிக்கையை எதிர்த்து டிரம்ப் பிரசாரக் குழு வழக்குத் தொடுத்துள்ளது.

எனினும் மிச்சிக்கன் மற்றும் விஸ்கொன்சினிலும் பைடன் வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனிய முடிவுகள் நேற்று மாலை வரை வெளியாகி இருக்கவில்லை.

இந்த மூன்று மாநிலங்களையும் கைப்பற்றினால் பைடனின் வெற்றி உறுதியாகிவிடும்.

எனினும் அவர் தமது வெற்றி பிரகடனத்தை வெளியிடுவதற்கு காத்துள்ளார். தமது குடியரசுக் கட்சி போட்டியாளரான டிரம்பை தோற்கடிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் மொத்த வாக்குப் பதிவு அமெரிக்காவில் 120 ஆண்டுகளில் அதிகபட்சமாக 66.9 வீதமாக இருந்ததாக அமெரிக்க தேர்தல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் பைடன் 70.5 மில்லியன் வாக்குகளை இதுவரை வென்றிருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக அது சாதனை படைத்தது. டிரம்ப் 67.2 மில்லியன் வாக்குகளை வென்றிருக்கும் நிலையில் அவர் 2016 தேர்தலில் பெற்றதை விடவும் நான்கு மில்லியன் வாக்குகளை அதிகமாக வென்றுள்ளார்.

பைடன் நம்பிக்கை

வில்மிங்டகனில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய பைடன், 'வாக்கு எண்ணுவது முடிவுறும்போது, நாமே வெற்றியாளர்களாக இருப்போம் என்று நாம் நம்புகிறோம். அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சி புரிவேன். ஜனாதிபதி பதவி என்பது பாகுபாட்டை ஏற்படுத்தும் அமைப்பு அல்ல' என்றார்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்கான இணையதளம் ஒன்றையும் பைடன் மற்றும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸ் ஆரம்பித்துள்ளனர். அந்த செயற்பாடுகள் முழு வேகத்தில் இடம்பெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் மிகச் சிறந்த முடிவு பற்றி பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிந்த பின் அந்த மாநிலத்தில் வெற்றியை அறிவிப்பதாக டிரம்ப் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

டிரம்பின் மூத்த பிரசாரகரான ஜேசன் மில்லர் கூறும்போது, 'இந்த வார முடிவில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி பென்ஸ் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு வெற்றி பெற்றிருப்பதை ஒட்டுமொத்த நாடும் தெரிந்துகொள்ளும்' என்றார்.

டிரம்பின் சட்ட சவால்கள்

விஸ்கொன்சின் மாநிலத்தில் டிரம்பின் பிரசாரக்குழு மறுவாக்குப்பதிவு கோரியுள்ளது. அங்குள்ள பல பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதேபோன்று மிச்சிகனில் நடந்த தேர்தலை எதிர்த்தும் டிரம்பின் பிரசாரக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. அங்கு வாக்குப்பெட்டிகள் முன்னரே திறக்கப்பட்டதை அர்த்தமற்ற செயல்பாடு என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பென்சில்வேனியாவில் வெளிப்படையாக வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அதை நிறுத்தக்கோரியும் டிரம்பின் பிரசாரக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வாக்குள் எண்ணப்பட வேண்டியுள்ளது.

ஜோர்ஜியாவிலும் வாக்கு எண்ணும் பணியை நிறுத்துமாறு டிரம்ப் கோரியுள்ளார். அங்குள்ள சாத்தம் பகுதியில் 53 வாக்காளர்கள் வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின், தாமதமாக வாக்கு செலுத்தியதை குடியரசு கட்சி தேர்தல் பார்வையாளர் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் விஸ்கொன்சின், மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் பெற்ற வெற்றியே அவர் வெள்ளை மாளிகைக்கு செல்ல உதவியது.

இந்த நிலையில், ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றது தாங்கள்தான் என்று கூறி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த குடியரசு கட்சியின் தேசிய குழு தலைவர் ரோன்னா மெக்டொனல், போட்டி இன்னும் முடியவில்லை. இன்னும் நாங்கள் களத்தில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவாளர்கள் அனைவரும் 5 டொலர்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசு கட்சியினர் தொடர்ந்துள்ள வழக்குச் செலவினங்களுக்காக இந்த நிதி பயன்படும் என்றும் இந்த வழக்குகள் நீண்ட நாட்கள் செல்லலாம் என்றும் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் போட்டிக்களத்தின் முக்கிய மாகாணங்களாக கருதப்படும் மாகாணங்களில் வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

போர்ட்லாண்ட், ஓரிகன் ஆகிய பகுதிகளில் டிரம்புக்கு எதிராக பதிவான 'ஒவ்வொரு ஓட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்' என்ற போராட்டத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கு சிலர் கூட்டத்திலிருந்து விலகி, சில கடைகளின் ஜன்னல்களை உடைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு கலவரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று மினியாபோலிஸில், வீதி மறியலில் ஈடுபட்ட சுமார் 200 போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் டிரம்பிற்கு எதிராகவும், வாக்கை நிறுத்துமாறு டிரம்ப் கூறியதற்கு எதிராகவும் போராடினார்கள் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் சிகாகோவிலும் போராட்டங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பீனிக்ஸ் மற்றும் அரிசோனாவில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான சிறியதொரு போராட்டமும் நடைபெற்றது. டெட்ரொய்டில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஜன்னலில் இருந்து வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.

வாக்குகள் எண்ணப்படவில்லை என்ற வதந்தி பரவியதை அடுத்து அரிசோனா, போனிக்ஸ் தேர்தல் அலுவலகம் ஒன்றுக்கு வெளியில் சுமார் 200 டிரம்ப் ஆதரவாளர்கள் கூடினர். அவர்களில் சிலர் துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.

ஐந்து மாநிலங்களின் முடிவு என்ன?

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தபால் மூலம் மற்றும் தனிப்பட்ட முறையில் சுமார் 100 மில்லியன் வாக்குகள் பதிவானதே தற்போது முடிவுகள் தாமதமாகக் காரணமாக உள்ளது.

பைடன் 264 தேர்தல் தொகுதிகளில் வென்றிருக்கும் நிலையில் அவர் வெற்றியை உறுதி செய்வதற்கு மிச்சிகன் மற்றும் விஸ்கொசின் மாநிலங்களில் வெல்வது உட்பட பல வழிகள் உள்ளன. ஆனால் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு முடிவுகள் வெளியாக வேண்டி இருந்து அனைத்து மாநிலங்களிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி இருந்து.

தீர்க்கமாக உள்ள பென்சில்வேனியா மற்றும் சிறிய முக்கிய மாநிலமாக உள்ள நவாடா உட்பட ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வெளியாக வேண்டி இருந்தது. தவிர, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் அலஸ்காவிலும் நேற்று மாலை வரை முடிவு வெளியாகி இருக்கவில்லை.

இந்நிலையில் பைடன் அரிசோனாவில் முன்னிலை பெற்றிருந்ததோடு அவர் நவாடாவிலும் வெற்றியை உறுதி செய்யும் பட்சத்தில் 270 தேர்தல் தொகுதிகளுக்கு தேவைப்படும் ஆறு இடங்களையும் வென்று விடுவார்.

டிரம்ப் அரிசோனாவில் தோற்றால் வடக்கு கரோலினா மற்றும் ஜேர்ஜியாவில் அவசியம் வெல்ல வேண்டிய நிலை இருந்தது. தவிர பைடனின் சொந்த மாநிலமான பென்சில்வேனியா அதேபோன்று நவாடாவிலும் அவர் வெல்வது அவசியம்.

எனவே பென்சில்வேனியாவை மாத்திரம் வெல்வது அல்லது அதனுடன் சேர்த்து அலஸ்கா மற்றும் அதன் மூன்று தேர்தல் தொகுதிகளை வெல்வது டிரம்பின் வெற்றிக்கு போதுமாக இல்லை.

இதனிடையே பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் பிரசாரக் குழு அங்கு நடைபெறும் வாக்கு எண்ணும் பணியை நிறுத்த கோரினர். மேலும் ஜனநாயகக் கட்சியினர் பென்சில்வேனியாவில் வாக்குகளை மாற்ற முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆளுநர் பென்சில்வேனியாவில் பதிவாகிய அத்தனை வாக்குகளும் எண்ணப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Fri, 11/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை