ஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்ற ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்

வெள்ளை மாளிகை நிர்வாக மாற்றம் தொடர்பான பணிகளை ஜோ பைடன் குழுவினர் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பொதுச் சேவை நிர்வாகப் பிரிவின் தலைவர் எமிலி மர்பி, ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் அதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி நிர்வாக மாற்றப் பணிகளைத் தாம் பொறுப்புடன் ஏற்று நடத்தவிருப்பதாக அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதையும், தேர்தல் முடிவுகளின் சான்றிதழ்கள் அண்மையில் வெளியானதையும் மர்பி சுட்டிக்காட்டினார். அதுகுறித்த தகவல்கள் பைடனின் குழுவினருக்கு வழங்கப்படும்.

மர்பியும், அவரது குழுவினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமது நிர்வாகம் வேண்டிய உதவிகளை வழங்கும் என்று ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமிலி மர்பி மற்றும் அவரது அமைப்பினர் அதிகார மாற்றத்திற்கான தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். எனது குழுவையும் அதிகார மாற்றத்திற்கான தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்”என்றார். 

அண்மையில் மிஷிகன் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது டிரம்புக்கு பெரிய அடியாக அமைந்தது.

எனினும், தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாக மாற்றம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று எமிலி மர்பி தெரிவித்துள்ளார்.

இந்த அதிகார மாற்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதை பைடன் தரப்பு வரவேற்றுள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார்.

முன்னதாக தனது அமைச்சரவை குறித்த விபரங்களை பைடன் வெளியிட்டிருந்தார். அதன்படி தமது நீண்டகால ஆலோசகர் அந்தோனி பிலின்க்கென்னை வெளியுறவு அமைச்சர் பதவிக்குத் தெரிவு செய்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளர். பிலின்க்கென் முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் பலதரப்பு இராஜதந்திர முறையில் நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு கீயூபாவிலிருந்து வந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அல்ஜென்ரோ மயோர்காஸை பைடன் தேர்ந்தெடுத்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான வெளியுறவுக் கொள்கைகள் பலவற்றை நீக்கப்போவதாக பைடன் உறுதியளித்துள்ளார்.

அதற்கு அதிகநாள் ஆகலாம் என்றாலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக மயோர்காஸ் பதவியேற்பதற்கு குடியேற்றத்தை ஆதரிக்கும் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்புக்கு ஜக் சல்லிவனை பைடன் தெரிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதராக முன்னாள் வெளியுறவுத் துணையமைச்சர் ஜோன் கெர்ரி அறிவிக்கப்படக்கூடும்.

அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஜெனட் எல்லன் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கக்கூடும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

Wed, 11/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை