மேல் மாகாணத்திலிருந்து வெளியே சென்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்து நடவடிக்கை

மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எவரேனும்  மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு சென்றிருந்தால் அவர்கள் அந்தந்த பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களை சந்தித்து சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணிவரை தடைவிதித்துள்ளது.

அதற்கமைய அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வேறு இடங்களில் இருந்து மேல் மாகாணத்திற்குள் வருகைதர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திற்கு வெளியில் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான இயலுமை உள்ளது. குறிப்பாக எவரெனும் இன்றைய தினத்திற்குள் மேல் மாகாணத்தில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மீண்டும் தமது பகுதிகளுக்கு செல்ல நினைத்தால் அது முடியாது. அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திற்குள் தங்கியிருந்து அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு செல்ல முடியும். தற்போது மேல் மாகாணத்தில் 25 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் வர முடியாது. குறிப்பாக மருத்துவ தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியும். ஏனையோர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாகாணத்திற்குள் சென்றுவர முடியும். முக்கியமாக மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பான அறிவித்தல் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களை கண்காணிக்க விசேட வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை