கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுமாறு அனைத்து பிரஜைகளுக்கும் அரசு அழைப்பு

கொவிட்19 இரண்டாம் அலையால் நாடு பாரிய நெருக்கடியிலுள்ள சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாது ஒரு குழுவாக அனைவரும் இணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமாகும். அரசியல், கட்சி, கருத்து பேதங்களுக்கு அப்பால் சவால்களை வெற்றிக்கொள்ள நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம். எம்மிடம் குறைப்பாடுகள் இருக்கலாம். குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து ஒன்றாக இணைந்து பயணிப்போமென வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

முழு உலகமும் கொவிட்19 நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தருணத்தில் நாமும் பல முயற்சிகளை எடுத்துவரும் சூழலில் இது தொடர்பில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுகள் மிகவும் அசாதாரணமானது. இது நாட்டுக்கும் மக்களும் செய்யப்படும் அசாதாரணமாகும். அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் போலியான பிரசாரங்களை முன்னெடுத்தாலும் மக்கள் தவறான பாதைக்குச் செல்லமாட்டார்களென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

கொவிட்19 ஆரம்பமான நாள் முதல் நாம் செயற்பட்டத்திற்கும் கொவிட்19 இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் செயற்பட்டத்திற்கும் இடையில் சில வேறுபாடுகளை செய்துள்ளோம். மாற்றமடையும் உலகில் மாற்றமடையும் தரவுகளை தெளிவாக அறிந்துக்கொண்டுள்ளோம். அதனால் அன்று செயற்பட்டது போன்று இன்று செயற்பட முடியாது. மூன்றாம் அலை ஏற்பட்டால் அத்தருணத்தில் இதனையும் விட மாறுட்ட விதத்தில் செயற்பட வேண்டியிருக்கும். முதலாம் அலையில் தேர்தலை மையப்படுத்தி செயற்பட்டதாக கூறுவது தவறானதாகும்.

கொவிட் 19 முதலாம் அலையில் நாட்டில் உள்ள 57 இலட்சம் குடும்பங்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம்.

அதிலும் அதிகமானவர்கள் உள்ளடக்கப்பட்டு 78 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணத்தை வழங்கினோம்.

இதற்கான 70 பில்லியன் பயன்படுத்தப்பட்டது. எதிர்பார்க்க முடியாத செலவீனங்களை எம்போன்ற நாடுகளுக்கு தாங்க முடியாது. என்றாலும், நாம் அந்த விடயம் செய்ய வேண்டியதென்ற அடிப்படையில் செய்தோம்.

இரண்டாம் அலை ஏற்பட்ட தருணத்தில் கொழும்பு, கம்பஹா என இடங்களை அறிந்து நடவடிக்கைகளை எடுத்தோம். கொவிட்19 இரண்டாம் அலையில் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதற்காக இதுவரை 07 பில்லியன் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மக்கள், நாடு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் அவற்றை பொருட்படுத்தாத விதத்தில் நாம் செயற்படவில்லை என்பதுடன், நாட்டின் சாதாரண அபிவிருத்தியையும் தடையின்றி கொண்டு செல்கிறோம்.

கொவிட்19 நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள புதிய சவால்களுடன் கடந்த காலத்தில் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் செயற்படுகிறோம்.

கல்வி செயற்பாடு மிகவும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல தயாராகும் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பில் கவலையடைகிறோம். இதனை சந்தர்ப்பமாக கருதி மிகவும் பலவீனமான நிலைக்கு செல்ல முற்படுவதை கடுமையாக நிராகரிக்கிறோம். கல்வித்துறையில் உயர்மட்டத்தில் உள்ளவர்களும் இந்தச் செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இது அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கான தருணமல்ல. அதனையும்விட மேலாக சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பமாகும் என்றார்.

Wed, 11/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை