முடிவை தீர்மானிக்கும் மாநிலங்களில் டிரம்ப் −பைடன் இடையே கடும் போட்டி

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு இடையே தீர்க்கமான மாநிலங்களில் கடும் போட்டி நிலவும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

கடும் போட்டி உள்ள ஐந்து மாநிலங்களில் டிரம்ப் நேற்று தனது இறுதிப் பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம் பைடன் இறுதி நேரத்தில் பென்சில்வேனியா மாநிலத்தில் அவதானம் செலுத்தி இருந்தார்.

கருத்துக்கணிப்புகளின்படி ஜோ பைடன் உறுதியான முன்னிலை ஒன்றை பெற்றுள்ளார். எனினும் முடிவைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாநிலங்களில் இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் 90 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 40 வீதமாக உள்ளது. இதனால் கடந்த நூற்றாண்டில் அதிக வாக்களிப்பு எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு வாய்ப்பை எற்படுத்தியுள்ளது.

அதேபோன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகம் பேர் முன்கூட்டியே தமது வாக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தேர்தல் முடிவிலும் செல்வாக்கு செலுத்தும் காரணியாக மாறியுள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கும் நிலையிலேயே அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நாளாந்த நோய்த் தொற்று சம்பவங்கள் ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார் என்பது பைடனின் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாகக் கூறப்பட்டு வந்தது. தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில் அந்நாட்டு பிரதான தொற்றுநோயியல் நிபுணர் அன்தோனி பவுச்சியும் டிரம்ப் நிர்வாகத்தை இது தொடர்பில் குறைகூறியுள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

எனவே கொரோனா தொற்று அமெரிக்க தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக மாறியுள்ளது.

தீர்க்கமான ஆறு மாநிலங்கள்

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதியான இன்று நடைபெறவுள்ளது.

பல நாடுகளைப் போன்று அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. எனினும் தேசிய அளவில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்பது இல்லை.

2016 ஆம் ஆண்டு டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் தேசிய அளவில் அதிக வாக்குகளை பெற்றபோதும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

‘எலக்டோரல் கொலேஜ்’ வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் எத்தனையை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் கொலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றிபெறுவார்கள்.

2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் கொலேஜ் முறையின் சாதகம் டொனால்ட் டிரம்புக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை அளித்தது. ஆனால் இம்முறையும் அதே சூழல் இருக்கும் என்று கூறமுடியாது.

குறிப்பாக ஆறு மாநிலங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவையாக உள்ளன. அரிசோனா, புளோரிடா, மிஷிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கொன்சின் ஆகியவையே அந்த மாநிலங்களாகும். இந்த மாநிலங்கள் சிலவற்றில் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை டிரம்ப் வெற்றி பெற்றார்.

புளோரிடாவில் கடந்த முறை குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டிரம்ப்பு கருத்துக் கணிப்புகளின்படி பைடனிடம் பின்தங்கியுள்ளார். வடக்கு கரோலினாவில் கறுப்பினத்தவர்கள் கணிசமாக இருக்கும் சூழலில் ஜனநாயகக் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய நகரங்களில் ஜனநாயகக் கட்சி கோலோச்சி வருகிறது. அதே நேரம் புறநகர்ப்பகுதியில் குடியரசு கட்சி ஆதிக்கம் செலுத்தியது.

தேர்தல் கள நிலவரப்படி முக்கிய மாகாணங்களான மிஷிகன், பெனிசில்வேனியா, விஸ்கொன்சின் ஆகியவற்றில் டிரம்பை விட ஜோ பைடனுக்கே தற்போதைய நிலையில் சாதகமான சூழல் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

முடிவில் சர்ச்சை ஏற்பட வாய்ப்பு

1992 ஆம் ஆண்டு ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷுக்குப் பின்னர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோற்றதில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்கூட்டியே அளிக்கபட்ட வாக்குகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் பதிவாகியுள்ளதை முன்னிட்டு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தல் தினத்தை தாண்டியும் வாக்கு எண்ணிக்கை நீடிப்பது “மோசமான நிலை” என்று கூறிய டிரம்ப், இதனால் தமது வழக்கறிஞர்கள் தலையிடக்கூடும் என்று கூறினார்.

தேர்தலுக்கு முந்திய வாக்குப் பதிவு அதிகரித்திருக்கும் நிலை காரணமாக சில மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் தினமான இன்று இரவு வாக்களிப்பு நேரம் முடிவுற்று பல மணி நேரத்திற்கு பின்னரே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

“தேர்தலுக்கு பின்னர் நாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவது நியாயமானதாக நான் நினைக்கவில்லை” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். பென்சில்வேனியா உட்பட சில மாநிலங்களில் தேர்தல் தினம் வரை தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை அரம்பிக்கப்படுவதில்லை என்பதால் அந்த செயற்பாட்டில் மந்த நிலை உள்ளது.

தபால் மூல வாக்கில் மோசடி இருப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறி வருகிறார்.

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அவ்வாறு மோசடி இடம்பெறுவது மிக அரிது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். “தேர்தல் முடிந்த உடன் நாம் எமது வழக்கறிஞர்களுடன் செயற்படுவோம்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

முடிவு எப்போது?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

2016ஆம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன் தனது வெற்றி உரையை டிரம்ப் ஆற்றினார்.

ஆனால் இந்த ஆண்டு தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒருவேளை வரும் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் டிரம்பின் இடத்திற்கு அவர் உடனடியாக வரமாட்டார். புதிய அமைச்சர்களை நியமனம் செய்யவும், திட்டம் தீட்டவும் அவருக்கு சிறிது காலம் வழங்கப்படும்.

வொஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20ஆம் திகதியன்று புதிய ஜனாதிபதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக்கொள்வார்.

அதனைத் தொடர்ந்து தனது நான்கு ஆண்டு காலப் பணியை ஆரம்பித்து புதிய ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

போர், உலகத் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தும் பதவியாகவும் அமெரிக்க ஜனாதிபதி பதவி உள்ளது. எனவே, இந்தத் தேர்தல் உலகெங்கும் அவதானத்தை பெற்ற தேர்தலாகவும் உள்ளது.

 

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை