பதவி விலகிய ஹொங்கொங் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை

ஹொங்கொங் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக இராஜினாமா செய்ததை ‘கேலிக்கூத்து’ என்று சாடி இருக்கும் சீனா, தமது நிர்வாகத்திற்கு விடுத்த நேரடி சவாலாக இது இருப்பதாக எச்சரித்துள்ளது.

சட்டமன்றத்தின் நான்கு சக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே ஒட்டுமொத்த 15 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடந்த புதன்கிழமை இராஜினாமாவை அறிவித்தனர்.

பதவி நீக்கப்பட்ட நால்வரும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக சீனா குறிப்பிட்டது.

எனினும் இது ஹொங்கொங்கில் சீனா தனது பிடியை மேலும் இறுக்குவதாகவே பார்க்கப்படுகிறது. இதனை ஒரு கட்சி சர்வாதிகாரம் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.

இந்நிலையில் இந்த பதவி விலகளை சீனாவின் ஹொங்கொங் மற்றும் மகாவு விவகாரங்களுக்கான அலுவலகம் கண்டித்துள்ளது. இந்த பதவி விலகல் சீன அரசு மற்றும் அடிப்படைச் சட்டங்களுக்கு விடுக்கு சவால் என்று அது குறிப்பிட்டுள்ளது.

“தமது பதவி விலகலை பயன்படுத்தி இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடும்போக்கு எதிர்ப்பாளர்களை தூண்டி வெளிநாட்டு தலையிட்டை எதிர்பார்ப்பதாயின் அது தவறான கணிப்பு” என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த ஹொங்கொங் சட்டமன்ற அமர்வில் அந்த எதிர்க்கட்சியனரின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

70 ஆசனங்கள் கொண்ட சீன சட்டமன்றத்தில் 21 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது அவர்களில் இருவர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.

சட்டமன்றத்துக்குள் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் காரணமில்லாமல் அகற்றுவதற்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் சீனாவைச் சாடினார்.

1997ஆம் ஆண்டு ஹொங்கொங்கை மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்தபோது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ள தன்னாட்சி, சுதந்திரம் தொடர்பான அம்சங்களை சீனா மீறுவதாக அவர் கூறினார்.

ஜரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜெர்மனியும் சீனாவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தது. சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் நடவடிக்கை அமைவதாக ஜெர்மானிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. 

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை