முடிவை தீர்மானிக்கும் மாநிலங்களில் டிரம்ப்–பைடன் இறுதிக் கட்ட பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் வெள்ளை மாளிகை செல்வதற்கு தீர்க்கமாக உள்ள மாநிலங்களில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வார இறுதி பிரசாரத்தில் பைடன் மிச்சிகனிலும் டிரம்ப் பென்சில்வேனியாவிலும் அவதானம் செலுத்தினார்.

மீண்டும் வெள்ளை மாளிகை செல்வதற்கான தேர்தலில் கருத்துக் கணிப்புகளின்படி பின்தங்கி இருக்கும் டிரம்ப், தனது வெற்றிவாய்ப்பை உறுதி செய்வதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடைசியாக 1992இல் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.

இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காக டிரம்ப் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் 10 பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன்படி அவர் நேற்று ஐயோவா, வடக்கு கரோலினா, ஜோர்ஜியா மற்றும் புளோரிடாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் டிரம்ப் தோல்வியுற்றதாகக் குற்றம்சாட்டி தனது பிரசாரத்தை நடத்தி வரும் பைடன் நேற்று பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தத் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றாக பென்சில்வேனியா கருதப்படுகிறது.

பைடன் கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட முன்னிலையில் இருந்தபோதும் தேர்தல் முடிவை மாற்றக்கூடிய மாநிலங்களில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் ஏற்கனவே 85 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்கூட்டி வாக்களித்திருப்பதோடு அதில் 55 மில்லியன் பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

Mon, 11/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை