பென்சில்வேனியாவிலும் டிரம்ப் பின்னடைவு: தோல்வியை ஏற்பதற்கு அழுத்தம் அதிகரிப்பு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலின்போது செலுத்தப்பட்ட மில்லியன் கணக்கான வாக்குகளைச் செல்லாதவை என்று அறிவிக்கக் கோரி பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரச்சாரக் குழு தொடுத்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

வழக்குக்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று வட்டார நீதிபதி கூறினார். ஊகங்களின் அடிப்படையில் வாக்குகளைச் செல்லாமல் ஆக்குவது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

பென்சில்வேனியாவில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியைத் தடுப்பதற்காக டிரம்ப் பிரச்சாரக் குழு அந்த வழக்கைத் தொடுத்தது.

20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பைடன் டிரம்பைவிட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

மாநிலத்தின் சில வட்டாரங்கள் அஞ்சல் வாக்குகளில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்த வாக்காளர்களுக்கு அனுமதி அளித்ததாக அவர்கள் கூறினர். அவ்வாறு செய்வது தவறு என்பது அவர்களின் வாதமாக இருந்தது.

தீர்க்கமான பென்சில்வேனியாவில் டிரம்பின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்றதை ஒப்புக்கொள்வதற்கான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் டிரம்ப்பிடம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பென்சில்வேனியாவின் அதிகாரபூர்வத் தேர்தல் முடிவு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜோர்ஜியா மாநிலம், பைடனின் வெற்றியை சான்றளித்ததன் மூலம் டிரம்ப் நிர்வாகத்திற்கு மற்றொரு அடியைக் கொடுத்துள்ளது. இங்கு வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு எண்ணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மிஷிகன் மாநிலத்தில் உள்ள குடியரசுக் கட்சி நிர்வாகிகள் ஜனாதிபதி தேர்தல் முடிவை அறிவிப்பதை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் மிகப் பெரிய கவுண்டியில் ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை மறுசரிபார்ப்புச் செய்ய வேண்டும் எனக் கோரி உள்ளனர்.

இருப்பினும், மிஷிகன் மாநில அரசு இந்த யோசனைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.

டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில் அதிகாரம் கைமாறும் செயற்பாடுகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Mon, 11/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை