அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா நியூயோர்க்கில் புதிய கட்டுப்பாடு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பை தடுப்பதற்கான இறுதி முயற்சி இதுவென்று அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ எச்சரித்துள்ளார்.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நியூயோர்க் நகரில் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படுவதோடு 10 அல்லது அதற்கு குறைவானவர்களே ஒன்றுகூட அனுமதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதோடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 65,368 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு புதிதாக 144,270 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக கொரோனா தொடர்பிலான கண்காணிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பெருந்தொற்றினால் நாளுக்கு சராசரியாக 900க்கும் அதிகமானவர்கள் மரணித்து வருகின்றனர். நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டி அருப்பதோடு 233,080 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த எட்டு நாட்களாக அமெரிக்காவில் தினசரி 100,000க்கும் அதிகமான புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றனர். குளிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை மிதமிஞ்சும் நிலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்தப் பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு முதல் ஆறு வாரங்கள் பொது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டி இருக்கும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் நோய்த் தொற்று சம்பவங்கள் சாதனை அளவுக்கு அதிகரித்துள்ளது. முதல் மாநிலமாக டெக்சாஸில் மாத்திரம் ஒரு மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்த மாநிலம் ஒரு தனி நாடாக இருந்தால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் 11ஆவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா, புளோரிடா, இலியானோ உட்பட ஏனைய மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 15 மாநிலங்களில் கடந்த மாதத்தை விடவும் தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கும் நிலையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அமெரிக்க ஊடுகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை