ஊரடங்குச் சட்டம் நாளை தளர்வு?

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியீடு

  ஒரு வீட்டிலிருந்து இருவர் மட்டுமே வெளியே செல்வதற்கு அனுமதி
 கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பூங்காக்களுக்கு அனுமதி இல்லை
 மத உற்சவங்கள், களியாட்டங்கள், கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை
 அத்தியாவசிய கடைகளில் நபர்களுக்கான இடைவெளி 1.5 மீற்றர்
 அரச, தனியார் துறையில் மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள்
 திருமண நிகழ்வுகளில் 50 பேர்; மரணச்சடங்கில் 25 பேர் மட்டுமே

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நாளை திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் நாட்டின் 55 துறைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல் தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

புதிய வழமைப்படுத்தல் அடிப்படையின் கீழ்  நானை திங்கட்கிழமை பெரும்பாலும் முழு நாட்டையும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,சுகாதார அமைச்சு மேற்படி சுகாதார வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது.

நாட்டில் வைரஸ் பரவல் மூன்றாவது மட்டத்திலுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின் நிறுவனங்கள் செயற்படவேண்டிய முறைகள் தொடர்பில் வழிகாட்டல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேற்படி வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் அல்லது அனுமதி பெற்றுக் கொண்ட செயற்பாடுகள் அல்லாத செயற்பாடுகளுக்காக ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

புதிய வழிகாட்டலின்படி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், டியூஷன் வகுப்புகள்,சினிமா தியேட்டர்கள், சிறுவர் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை, கசினோ, இரவு களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட சமூக மத்திய நிலையங்கள் ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். வீடுகளில் மற்றும் திறந்த வெளிகளில் நடத்தப்படும் உற்சவங்கள், களியாட்ட நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள்,கடற்கரை நிகழ்வுகள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டபோதும் நபர்களுக்கான இடைவெளி 1.5 மீற்றராக இருப்பது அவசியம். எனினும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் குறிப்பிட்ட இடத்தின் இட வசதிக்கேற்ப 50 வீதமாக மட்டுப் படுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்துகளில் வாகனத்தின் கொள்ளளவுக் கேற்ப எழுபத்தைந்து வீதமான பயணிகளே அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் தனியார் வாடகைக் கார் அல்லது முச்சக்கர வண்டிகளில் ஒரே தடவையில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்துவதுடன் பெரும்பாலும் வீடுகளிலிருந்தே வேலை செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

திருமண நிகழ்வுகள் 50 பேரின் பங்குபற்றுதலுடன் மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பதுடன் மரணச் சடங்குகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

சமய வழிபாட்டுத் தலங்களில் ஒரு தடவையில் 25 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். எவ்வாறாயினும் அத்தகைய இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் செயற்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என்றும் சுகாதார அமைச்சின் மேற்படி வழிகாட்டல் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sun, 11/08/2020 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை