தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க என்ன வழி?

சபையில் மனோ எம்.பி விளக்கம்

தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டுமானால் பெருந்தோட்டங்களின் கீழ் இருக்கின்ற நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்வாங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் காணி, பெருந்தோட்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

75 வீத நிலப்பரப்பு பெருந்தோட்ட கம்பனிகள் வசமே உள்ளன. 25 வீதம்தான் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் இருக்கின்றது. ஆனால் ஏற்றுமதியில் சிறுதோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பு 75 வீதமாகவும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பங்களிப்பு 25 வீதமாகவும் இருக்கின்றது.

இன்று வெளியார் உற்பத்தி என்ற போர்வையில் சில செயற்பாடுகள் இடம்பெற்றாலும் அவை தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அடிமை சாசன முறையாகவுமே இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வழங்கிவிட்டு, தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கொழுந்தை கேட்கின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிடவேண்டும். நிலங்களை பகிர்ந்தளித்து தோட்டத் தொழிலாளர்களை பங்காளிகளாக்க வேண்டும். ஏனெனில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் காணி குத்தகைக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அப்போது தேயிலை பயிர்செய்கை கொடிகட்டிப் பறக்கும். தொழிலாளர்களும் கிராமவாசிகளாக, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறுவார்கள். இதனை அமைச்சர் செய்வாரென நம்புகின்றோம்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Sat, 11/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை