வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் நிபந்தனை

ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு தேர்தல் சபை வாக்களித்தால், தாம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறத் தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 14ஆம் திகதி தேர்தல் சபை கூடவுள்ளது. ஜனவரி 20ஆம் திகதி பைடன் ஜனாதிபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு 306 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்தன. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 270 வாக்குகள் பெற்றால் போதுமானது.

மொத்த வாக்குகளிலும் டிரம்பை விட 6 மில்லியனுக்கும் அதிகமானோரின் ஆதரவைப் பெற்றுள்ளார் பைடன்.

எனினும், டிர்ம்ப் இதுவரை தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் தாம் வென்றதாகவே கூறிவருகிறார். தேர்தலில் பரவலாக மோசடி நேர்ந்ததாய்க் குறைகூறும் அவர் அதை நிரூபிக்க ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்ப்பின் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முயன்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது குறித்து கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கே டிரம்ப் இவ்வாறு பதிலளித்திருந்தார். தேர்தல் சபை வாக்கெடுப்பில் தோற்றால் என்ன செய்வீர்கள், என்ற அந்தக் கேள்விக்கு, “நிச்சயமாக நான் வெளியேறுவேன். அது உங்களுக்கும் தெரியும்.

என்றாலும் அவர்கள் அவ்வாறு செய்தால் (பைடனை தேர்ந்தெடுத்தால்) அது மிகப்பெரிய தவறு” என்று டிரம்ப் குறிப்பிட்டார். இதன்மூலம் டிரம்ப் ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதை இந்த பதில் காட்டுவதாக உள்ளது.

“பெரும் மோசடி இடம்பெற்றிருப்பது தெரிந்திருக்கும்போது தோல்வியை ஒப்புக்கொள்வது மிகக் கடினமான ஒன்று” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் எந்த ஆதாரமும் இன்றியே இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.

பைடனின் பதவி ஏற்பு நிகழ்வில் தாம் பங்கேற்பது குறித்தும் டிரம்ப் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

அமெரிக்காவில் தேர்தல் சபை என்பது ஜனாதிபதியை தேர்வு செய்யக்கூடிய தேர்வாளர்களை கொண்ட ஒரு குழுவாகும்.  இந்த குழுவினர் அளிக்கும் வாக்குகளுக்கு ஏற்ப பெரும்பான்மை வாக்குகளை பெறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இதுபற்றி டிரம்ப் மேலும் கூறும்போது, வாக்களிக்கும் உள்கட்டமைப்பில் நாம் 3ஆவது உலக நாடு போல் இருக்கிறோம். ஊடுருவல் செய்ய கூடிய கணினி சாதனங்களை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம் என கூறினார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்புமருந்து விநியோகம் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னிலை ஊழியர்கள், மருத்துவர்கள், தாதிகள், மூத்த குடிமக்கள் முதலியோருக்குத் தடுப்புமருந்து முதலில் வழங்கப்படும் என அவர் கூறினார்.அமெரிக்காவில் பதிவான கொவிட்–19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 13 மில்லியனை நெருங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 263,000க்கும் அதிகம். 

Sat, 11/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை