ஜோ பைடனின் வெற்றி குறித்து டிரம்ப் முதல்முறையாக கருத்து

தொடர்ந்து தோல்வியை ஏற்க மறுக்கிறார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி பற்றி முதல் முறையாக கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்துள்ளார்.

“தேர்தலில் மோசடி இருந்ததால் அவர் வெற்றிபெற்றார்” என்று குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் ஆதாரம் இன்றி இந்தப் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.

நவம்பர் 3ஆம் திகதிய தேர்தலில் தாம் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்று அவர் ஒரு மணி நேரத்தின் பின் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் முக்கிய மாநிலங்களில் பல சட்ட நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளபோது தேர்தலில் மோசடி இடம்பெற்றதான குற்றச்சாட்டு பற்றி எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

தேர்தல் மிக நேர்மையாக நடந்தது என்றும், வாக்காளர்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆனால், இதுவரை பைடனின் வெற்றியை அங்கீகரிக்காமல் இருந்த டிரம்ப் இப்போது அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கைலேக் மெக்கெனானி, “ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்தும் தாமே ஜனாதிபதி என்பதை நம்புகிறார்,” என்று கூறி உள்ளார்.

இதேவேளை தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறும் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வொஷிங்டனில் பேரணியை முன்னெடுத்தனர்.

அமைதியாக நடந்த போராட்டத்தில் மாலை நேரத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. டிரம்பின் ஆதரவாளர்களும், அவரது எதிர்ப்பாளர்களும் சில இடங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இருபது பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு பொலிஸார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளனர்.

ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் சபைகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பைடன் 306 இடங்களை வென்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தேர்தலின் ஒட்டுமொத்த முடிவுகளில் தாக்கம் செலுத்த வாய்ப்பு இல்லை.

பைடன் மொத்த வாக்கு எண்ணிக்கையிலும் டிரம்பை விட ஐந்து மில்லியன் அதிக வாக்குகளை வென்றுள்ளார்.

 

Tue, 11/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை