Header Ads

விளக்கீட்டு சுட்டிகளை வீழ்த்தி சுன்னாகம் பொலிசார் அத்துமீறல்

- அமைச்சர் டக்ளஸ் தலையீட்டால் விளக்கீட்டுக்கு பொலிஸார் அனுமதி

சைவ மக்களின் கார்த்திகை தீபத் திருநாளான நேற்று விளக்கு ஏற்றுவதற்கு ஆயத்தமான வாழை மரங்களை தட்டி வீழ்த்தி சுன்னாகம் பொலிசார் அட்டகாசம் செய்துள்ளனர். அத்துடன் சுன்னாகம் பகுதியில் உள்ள எந்த ஆலயத்திலும் விளக்கீடு செய்யக்கூடாது எனவும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நேரில் சென்று எச்சரித்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு செய்ய முடியாது என்று கூறிய சுன்னாகம் பொலிசார், ஆலய இளையவர்களினால் செய்யப்பட்ட எற்படுகளை கால்களினால் தட்டி வீழ்த்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று இளைஞர்களுடன் கலந்துரையாடியதாகவும், இதனை வெறுமனே நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு எதிராக எமது சமய குருமார்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என எல்லோரும் ஒட்டு மொத்த எதிர்வினையை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் துணிச்சலோடு எமது சமய பாரம்பரிய விளக்கீட்டை மேற்கொள்ளுங்கள். நாம் சட்ட ரீதியாக அனைத்துவிதமான பாதுகாப்புக்களையும் வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்ட பின்னர், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று வரலாற்று பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் உட்பட்ட சைவ ஆலயங்களுக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தற்காலிக பொறுப்பதிகாரியாக கடமையாற்றுபவர் விளக்கீட்டு பூஜையினை செய்யமுடியாதென்றும் மீறீ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் தலையீட்டினையடுத்து ஆலயங்களில் விளக்கீடு வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தலையீட்டால் விளக்கீட்டுக்கு பொலிஸார் அனுமதி

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி தடை விதித்த் நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து விளக்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி மாவீரர் நாள் தீபம் ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே நிகழ்வுக்கு தடை விக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அநாகரியமாக நடந்துகொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஈ.பி.டி.பி.உறுப்பினர் செந்தூரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அது தொடர்பில் யாழ்.மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபருடன் உரையாடிய அமைச்சர், சைவ மக்களின் பாரம்பரிய வழிபாடான கார்த்திகை தீபத்திருநாளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கும் சொர்க்கைப்பானை எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த வழிபாட்டை சிலர் பிழையாக அர்த்தப்படுத்தி முறைப்பாடுகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர், பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீபங்களை ஏற்றுவதும் சொர்க்கப்பானை எரிப்பதும் கார்த்திகைத் திருநாளில் சைவ மக்களின் மரபு, இதனை பிழையாக அர்த்தப்படுத்தி தடை விதிக்கவேண்டாம் என கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட நிருபர்கள், யாழ்.விசேட நிருபர்

Mon, 11/30/2020 - 10:12


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.