தென்னமரவாடி, திரியாய் காணிகளுக்குள் நுழைவதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு இடைக்கால தடை

சட்டத்தரணி சயந்தனின் சட்டவாதத்தை ஏற்று திருமலை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருகோணமலை தென்னமரவாடி, திரியாய் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று காணியை பரமாரிக்க எந்தத் தடையையும் தொல்லியல் திணைக்களம் ஏற்படுத்தக் கூடாது எனவும், அதில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது எனவும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தவிட்டார்.

இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுதாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என்ற சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சட்டவாதத்தை ஏற்று நீதிமன்றம் இவ் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

தென்னமரவாடி, திரியாய் ஆகிய பகுதிகளில் உள்ள தமது காணிகளுக்குள் தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி பிரசுரம் மூலம் தலையீடு செய்துள்ளதாக திரியாய் பகுதி சார்பாக 17 மனுதாரர்களும், 3 தென்னமரவாடி மனுதாரர்களும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் அவசர மனுவாக வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் முதல் எதிர்மனுத்தாரராகவும், உதவி காணி ஆணையாளர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் எதிர்மனுத்தார்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மேலும் இவ் வழக்கானது அவசர மனுவாக நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட மனுத்தாரர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், மேற்படி வழக்கானது அவசர மனுவாக எடுத்து இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிக்கப்பட்ட காணிகள் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதாகும். அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் இம் மனுமீது காலம் தாழ்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அது, மனுத்தாரரின் உரிமைகளில் ஏற்பட்ட சேதத்தை மீள பெற முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். எனவே இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களம் குறித்த காணிகளுக்குள் தலையீடு செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்குமாறு மன்றை கேட்டுக்கொள்கிறேன் என தனது வாதத்தை முன்வைத்தார்.

மனுத்தாரர் தரப்பு வாதத்தை கவனித்த மன்று, அதில் காணப்பட்ட சட்டவாதத்தை ஏற்று இடைக்கால கட்டளையை வழங்கியது.

இதன்படி, குறித்த காணிகளுக்குள் 14 நாட்களுக்கு தொல்பொருள் திணைக்களம் சென்று எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என இடைக்கால தடையுத்தரவு விதிக்கிறது எனவும் அக் காணிகளில் காணி உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று தமது காணிகளை பராமரிக்க எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் இந் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கிறது.

மேலும் இவ் வழக்கில் எதிர்மனுத்தாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோர் எதிர்வரும் 23.11.2020 அன்று நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு ஆட்சேபனையை முன்வைக்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

அன்புவளிபுரம் தினகரன், றொட்வெவ குறூப் நிருபர்கள்

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை