டெங்கொழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் டெங்கொழிப்பு  தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் இன்று (16)  நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர். ஏ.எம். நௌபர், தொற்று நோயியல் வைத்தியர் குணம், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் அகமட் அவ்கார், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. முகமட் றியாஸ், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாயல் தலைவர்கள்,  சுகாதார வைத்திய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் நாளை முதல் மேலதிகமாக இழுவை இயந்திரங்களை பயன்படுத்தி பிரதேசத்தில் காணப்படும் பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் திண்மக்கழிவு பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், இதற்கு தேவையான ஆளணி வழங்குதல்,  எதிர்வரும் புதன்கிழமையன்று பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை அகற்றுதல், பாவனைக்கு உதவாத குழாய் கிணறுகளை அகற்றி அதன் விபரத்தினை மேலதிக நடவடிக்கைக்காக பிரதேச செயலாளரிடம் விபரம் சமர்பித்தல், கவனிக்கப்படாத, கைவிடப்பட்ட காணிகளை அடையாளப்படுத்தி விபரத்தினை  மேலதிக நடவடிக்கைக்கு பிரதேச செயலாளரிடம் சமர்பித்தல், கிணற்று நீரினை நஞ்சுத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள மீன் குஞ்சுகள் இடல்,  கிணற்றினை மூடக்கூடிய மூடிகளை இட்டு நீரினை சுத்தமாக வைத்திருத்தல், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முதல் அறிவுத்தல் விபரம் அடங்கிய பிரதியை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தல், மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதேவேளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஜனவரி மாதம் முதல் 387 டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்னர் என்றும் இதில் ஒக்டோபர் மாதம் 124 பேரும், நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை  48 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

(பாசிக்குடா நிருபர் - உருத்திரன் அனுருத்தன்)

Mon, 11/16/2020 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை