இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல் அணியை புரட்டியெடுத்த மும்பை அணி இறுதிப்போட்டியை எட்டியது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது. மும்பை அணியில் 3 மாற்றமாக ஓய்வில் இருந்த பும்ரா, டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் திரும்பினர். இதனால் சவுரப் திவாரி, தவால் குல்கர்னி, பேட்டின்சன் கழற்றி விடப்பட்டனர்.

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் மும்பையை துடுப்பெடுத்தாட பணித்தார். இதன்படி அணி தலைவர் ரோகித் சர்மாவும், குயின்டான் டி கொக்கும் மும்பை அணியின் இன்னிங்சை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கினர். 2-வது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா (0) துல்லியமான எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு டி கொக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ஓட்ட விகிதத்தை எகிற வைத்தனர். அக்‌ஷர் பட்டேல், அஸ்வின் ஓவர்களில் சிக்சர் பறந்தன.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள் திரட்டியது. இந்த பருவத்தில் பவர்-பிளேயில் மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்கோர் 78ஓட்டங்களாக உயர்ந்த போது குயின்டான் டி கொக் 40 ஓட்டங்களில் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் தூக்கியடித்து பிடி ஆனார். சிறிது நேரத்தில் நடப்பு தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட் (0) அஸ்வின் சுழலில் சிக்கினார். அப்போது மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்களுடன் (12.2 ஓவர்) லேசான தடுமாற்றம் கண்டது. இந்த சூழலில் இஷான் கிஷனும், குருணல் பாண்ட்யாவும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். இருப்பினும் ஓரிரு ஓவர்களில் ரன்வேட்டை தளர்ந்தது. குருணல் பாண்ட்யா 13 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் ‘சரவெடி’யாய் வெடித்தனர். ரபடா, நோர்டியாவின் ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா தலா 2 சிக்சர்களை தெறிக்க விட்டு பிரமாதப்படுத்தினார். இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்சரோடு 200 ஓட்டங்களை தொட வைத்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது. இஷான் கிஷன் 55 ஓட்டங்களுடனும் (30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 37 ஓட்டங்களுடனும் (14 பந்து, 5 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 55 ஓட்டங்கள் சேகரித்தனர். டெல்லி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விக்கெட் ஏதும் எடுக்காத காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 44 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

பின்னர் 201 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ‘செக் ’ வைத்தார். அவரது ஓவரில் பிரித்வி ஷா (0), அடுத்து வந்த ரஹானே (0) வீழ்ந்தனர். இதன் பின்னர் ஷிகர் தவான் (0), தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் (12 ஓட்டங்கள்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காலி செய்ய டெல்லி அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பு சிதைந்தது.

20 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய டெல்லி அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ஓட்டங்கள், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் (42 ஓட்டங்கள் )அணி 100 ஓட்டங்களை கடக்க உதவினர்.

20 ஓவர்களில் டெல்லி அணியால் 8 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் இன்று மோதும்.

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை