அமெரிக்க ஜனாதிபதியாக பைடனின் வெற்றிக்கு நட்பு நாடுகள் உடன் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையிலும் ஜோ பைடனின் வெற்றி உறுதியான விரைவிலேயே அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் அவருக்கு வாழ்த்தை வெளியிட்டுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் நெருக்கமாக நட்பு நாடுகளுடன் முறுகல் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜி7 மற்றும் நேட்டோ கூட்டணிகளில் டிரம்ப் நிர்வாகத்துடன் முறுகலில் இருக்கும் ஜெர்மனி, கனடா மற்றும் பிரான்ஸ் பைடனின் வெற்றியை அங்கீகரித்து முதல் வாழ்த்துகளை தெரிவித்தன.

“ஜனாதிபதி பைடனுடன் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்பட நான் எதிர்பார்க்கிறேன்” என்று ஜெர்மனி சான்செலர் அங்கேலா மேர்கல் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டார். “எமது காலத்தின் மிகப்பெரிய சவால்களை நாம் கையாள்வதாயின் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலான எமது நட்பு ஈடு செய்ய முடியாததாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் காலநிலை மாற்றம் உட்பட உலகின் மிகப்பெரிய சவால்களை சமாளிக்க தாம் எதிர்பார்ப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

டிரம்புடன் ஒரு சுமுகமான உறவைப் பேணி வந்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பைடனுக்கு விரைவாக தமது வாழ்த்தை வெளியிட்டிருந்தார்.

“அமெரிக்கா எமது மிக முக்கிய நட்பு நாடு என்பதோடு காலநிலை மாற்றம் தொடக்கம் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு வரை எமது முன்னுரிமையான விடயங்களில் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக விலகியபோதும், அதில் மீண்டும் இணைவதாக பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

“அமெரிக்கா தமது ஜனாதிபதியை தேர்வு செய்துள்ளது” என்று குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், “இன்றுள்ள சவால்களை முறியடிப்பதற்கு நாம் பல விடயங்களை செய்ய வேண்டி உள்ளது. நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்!” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பல தலைவர்களும் டிரம்பின் பெயரை குறிப்பிடாதபோதும், ஸ்பெயினின் தீவிர இடதுசாரி துணைப் பிரதமர் பப்ளோ இக்லேசியஸ், டிரம்பின் வெளியேற்றம் உலகெங்கும் தீவிர வலதுசாரிகளை பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

“டிரம்ப் தேர்தலில் தோல்வியுற்றது உறுதியாகிவிட்டது. உலகின் தீவிர வலதுசாரிகள் தமது வலுவான அரசியல் சொத்தை இழந்திருப்பது இந்த உலகுக்கு நல்ல செய்தியாக உள்ளது” என்று இக்லேசியஸ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பற்றி குறிப்பிட்டு கூறியுள்ளார். ஹாரிஸின் தாய் அமெரிக்காவுக்கு குடியேறிய இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அமெரிக்க துணை ஜனாதிபதியாகும் முதல் பெண் மற்றும் முதல் கறுப்பின மற்றும் ஆசிய பூர்வீகம் கொண்டவராவார்.

“உங்களது வெற்றி உங்களது சித்திக்கு மாத்திரமல்ல அனைத்து இந்திய அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமையாகும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதில் அவர் சித்தி என்ற தமிழ் சொல்லை அவ்வாறே தனது ட்விட்டரில் பயன்படுத்தி இருந்தார். ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டபோது கமலா இந்த சித்தி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளியான எகிப்தும் பைடனுக்கு வாழ்த்தை வெளியிட்டுள்ளது. அதேபோன்று அமெரிக்காவுடன் கசப்பான உறவை கொண்டுள்ள லெபனானும் பைடனை வாழ்த்தியது.

சில நட்பு நாடுகள் அவதானத்துடன் தமது வாழ்த்தை வெளியிட்டிருந்தன. அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பைடனை வாழ்த்திய அதேவேளை டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் மூலோபாய ரீதியான நட்பு நாடாக இருக்கும் போலந்தின் ஜனாதிபதி அன்ட்ரேசெஜ் டுடா, வெற்றிகரமான தேர்தல் செயற்பாட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, தேர்தல் தொகுதி மூலம் வெற்றியாளரை தேர்வு செய்யும்வரை நாம் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா உடன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ரஷ்யாவும் ஆரம்பத்தில் அமைதி காத்திருந்தது.

அண்டை நாடான ஆப்கானில் அமைதி செயற்பாடுகளில் பைடனுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

தலிபான்களுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டிய டிரம்ப் நிர்வாகம் ஆப்கானில் இருந்து தமது துருப்புகளை வாபஸ் பெறும் திட்டத்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்த தவறுகளை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஈடு செய்ய வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க மக்கள் எதிர்த்தபோதும் டிரம்ப் கொள்கைகளை சேதப்படுத்தினார். கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பமான இதனை அமெரிக்காவின் அடுத்த நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலகுடன் ஆக்கபூவமான தொடர்பை ஈரான் விரும்புகிறது” என்று ரூஹானியின் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து விலகிய டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் மீது மீண்டும் கடுமையான தடைகளை கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். எமது மக்களின் சுதந்திரம், கௌரவம், நீதியை அடைவதற்காக மற்றும் பலஸ்தீன – அமெரிக்க உறவை பலப்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட பலஸ்தீனர்கள் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்புக்கான நிதி உதவிகளை மீண்டும் வழங்குவதற்கு ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில் மேற்குக் கரை மற்றும் காசா பகுதிக்கான 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நிறுத்தியதோடு கிழக்கு ஜெரூசலத்தில் பலஸ்தீனர்களுக்கான 25 மில்லியன் டொலர் நிதியையும் 2018இல் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியது.

கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தால் கிழக்கு ஜெரூசலத்தின் அமெரிக்க துணைத் தூதரகமும் மூடப்பட்டது.

இஸ்ரேலுக்கு சார்புடையது என்று பலஸ்தீனர்கள் சாடிய டிரம்பின் மத்திய கிழக்கு அமைதி முயற்சிக்கு ஜோ பைடன் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்ததுதோடு பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசி வந்தார்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை