கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டில் காணப்பட்ட சமூக பொருளாதார அழிவுகளை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம்

வரவு- - செலவு திட்டத்தின் உள்ளடக்கத்தை  விளக்கி பிரதமர் சபையில் உரை

கடந்த 5 வருட காலப்பகுதியில் காணப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுப் பாதையை மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் வரவு செலவுக் கொள்கையின் உள்ளடக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை செலுத்த முடிந்துள்ளது. அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன், தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சி முயன்று வருகிறது.

எனினும் எமது அரசாங்கம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும்   2020 ஆம் வருடத்தில் நாம் நிறைவேற்றிய பணிகளோ கொஞ்ச நஞ்சமல்ல என்று கூறிய அவர், 2021 வரவு செலவுத்திட்டத்தினூடாக எமது நாட்டில் நவீன பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது. எனினும் 2020 இற்கான கடன்களை செலுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எமது பலவீனமான வரவு செலவுத்திட்ட மற்றும் பொருளாதாரத்திற்கு மத்தியிலும் கூட கொரோனா வைரஸ் தொற்றை முகாமை செய்வதற்கு பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை அடையாளம் காணல், தனிமைப்படுத்தல், பரிசோதனைகள் மற்றும் இவை சார்ந்த சேம நலன் நடவடிக்கைகளுக்காக இதுவரை அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை சுமார் 70,000 மில்லியன் ரூபாவாகும். நோய் பீடித்தவர்களுக்கு விசேட சிகிச்சைகளை அளிப்பதற்கான கட்டில்களின் எண்ணிக்கை சுமார் 600 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் பரிசோதனைக்கான PCR கொள்ளளவை நாளொன்றுக்கு 7,500 –10,000 வரை அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதுடன், இங்கு ஒரு PCR பரிசோதனைக்கான செலவு ரூபா 6,000 என்ற வகையில் ஒரு நாளுக்கான செலவு 50 மில்லியன் ரூபாவை தாண்டுகின்றது. 14 நாள் நோய் நிவாரணத்திற்கு உட்படுத்தப்படுகின்றவர்களின் உணவு மற்றும் சேமநலன் நடவடிக்கைகளுக்காகவும் அரசு பெருந் தொகைப் பணத்தை செலவு செய்கின்றது. இதனிடையே கொரோனா தொற்று நோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.

2020 தொடக்கம் வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன் சேவையின் அளவு சுமார் 4,200 மில்லியன் அமெரிக்க டொலராகும். எதிர்க்கட்சியினரும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களும், எமது நாட்டை பாரிய கடன் வலையில் சிக்கி கடன் சேவைகளை செலுத்தாது தட்டிக்கழிக்கின்ற நாடாகவே எதிர்வு கூறினர். அவர்களது எதிர்வு கூறல்கள் மூலம் காட்டப்பட்ட இருண்ட உருவத்திற்குப் பதிலாக எமது அரசாங்கம் 2020 வருடத்திற்காக செலுத்த வேண்டியிருந்த வெளிநாட்டுக் கடன் அனைத்தையும் செலுத்தினோம்.

 

(ஷம்ஸ் பாஹிம். நிசாந்தன் சுப்ரமணியம்

Fri, 11/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை