வெளி மாகாணங்களுக்கு செல்வதற்கான தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கம்

தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் இன்று முதல் சில பகுதிகளில் தளர்வு

மேல் மாகாணத்தில் இருந்து வெளிச் செல்வதற்காக அரசாங்கம் விதித்திருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பல பிரதேசங்கள் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதுடன்

கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பிரதேசங்களுக்கு மேலதிகமாக மேலும் 5 பொலிஸ் நிர்வாக ப்பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, அரசாங்கம் மேல் மாகாணத்திலிருந்து வெளிச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவுமுதல் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாகாணங்களுக்கு பயணிப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அதேவேளை,தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை கொழும்பில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மேலும் 5 பொலிஸ் பிரிவுகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மருதானை, கொம்பனி வீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களனி பிரதேசத்தில் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொட, ஜா-எல, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நடைமுறையில் இருக்கும் என்றும் ஏனைய பிரதேசங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க பமுனுகம சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகளும் மீள திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் மற்றும் குடியாப்பிட்டி பொலிஸ் நிர்வாகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, ஹொரணை, வேகொட மேற்கு ஆகிய பிரதேசங்களுக்கும் தனிமைப்படுத்தல் முடக்கம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல, மாவனெல்லை பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் முடக்கம் நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த இரண்டு தினங்கள் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முற்பகல் முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெவித்தது. அதற்கிணங்க அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் தெரிவித்தது.

எனினும் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, வாழைத்தோட்டம், கொம்பெனி வீதி, பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வகையிலேயே தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கிணங்க அரச நிறுவனங்கள் முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி தொடர்பான சேவை நிறுவனங்கள் அப்பகுதிகளில் வழமை போன்று செயற்படும்.

அதேவேளை, தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அத்தகைய நிறுவனங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் செயற்பட உள்ளன. சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி செயற்படுவதற்கு அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து புறப்படும் ரயில் மற்றும் பஸ் சேவைகளுக்கு தடை ஏற்படாத வகையிலேயே மேற்படி தனிமைப்படுத்தல் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை