கையடக்கத் தொலைபேசி திருட்டு; பெண் உட்பட 8 பேர் கைது

கையடக்கத் தொலைபேசிகளை களவாடி  விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 08 சந்தேகநபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (06) அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கடை ஒன்றில்  தொடர்ச்சியாக 20 இற்கும் அதிகமான விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால்,  சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்படி  அம்பாறை கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜயரட்னவின் ஆலோசனையினூடாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற சார்ஜென்ட் ஆரியசேன (24893) கன்ஸ்டபிள்களான துரைசிங்கம்(40316) ஜகத்(74612)  குழுவினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசிகளை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்து வந்துள்ளமையை  தொடர்ந்து, கடை உரிமையாளர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார்.

இதற்கமைய  குறித்த கடையில்  பொருத்தப்பட்டிருந்த CCTV கமெரா காணொளியினை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார், முதலில் குறித்த கடையில் பணியாற்றிய இரு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களவாடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை  சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில்  உள்ள தொலைபேசிகளை வாங்கி  விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இருவர்  கைதாகினர். இவ்வாறு கைதான இருவரையும்  கொண்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின்போது பெண்  ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைதாகினர்.

இவ்வாறு கைதான 8 சந்தேக நபர்களது தகவலின்படி களவாடப்பட்ட 20 கையடக்கத் தொலைபேசிகளில் காரைதீவு பகுதியில் இருந்து 8 கையடக்கத் தொலைபேசிகளும் சாய்ந்தமருதில் இருந்து 10 கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த சம்பவத்தில் கையடக்கத் தொலைபேசிகளை களவாடியவர்கள், அதை  வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட   08  சந்தேகநபர்களும் நாளை (08) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(பாறுக் ஷிஹான்)

Sat, 11/07/2020 - 13:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை