4.4 மில்லியன் மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி

அவசர தேவையுடையோருக்கு முன்னுரிமையளிக்கப்படும்

எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

கொவிட் − 19 தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்த பின்னர் இலங்கையில் 4.4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும். தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவர்களுக்கு அதனை செலுத்துவதற்கான முன்னாயத்தங்களை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதுடன், அதற்காக தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணத்தின் பின்னர் 27/2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரச வைத்தியசாலைகளில் 34 பி.சி.ஆர். இயந்திரங்களும், 1020 வெண்டிலேட்டர்களும், 704 அவசர சத்திர சிகிச்சை கட்டில்களும் உள்ளன. கொவிட் தொற்று எமது நாட்டில் கண்டறியப்பட்டதும் அரச வைத்தியசாலைகளுக்கு 25 பி.சி.ஆர் இயந்திரங்களும், 220 வெண்டிலேட்டர்களும், 61 அவசர சத்திரசிக்சை கட்டில்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் 25 பி.சி.ஆர். பரிசோதனை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 34 இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இவை தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போதுமானவையாகும். எதிர்காலத்தில் இவற்றின் தேவைகளை மேலும் அதிகரித்துக்கொள்ள உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரச வைத்தியசாலைகளில் புதிய பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரங்களை பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவசர சத்திரசிக்சை கட்டில்களை அதிகரிக்கவும் கொவிட்19 தொற்றை எதிர்கொள்ளவும் தேவையான முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரச வைத்தியசாலைகளில் தினமும் 11,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பி.சி.ஆர் பரிசோதனைகளை துரிதமாக செய்வதற்கான தொழில்நுட்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

உலக வங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பெற்றுக்கொடுத்த நிதி உதவிகளின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் கொவிட் ஒழிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களும் கையாளப்பட்டு வருவதுடன், பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வினைத்திறனுடன் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளும் அரச வைத்தியசாலைக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு நிபுணர் குழுவின் அறிவுறுத்தல்களுக்கமைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 11/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை