அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதில் 3ஆவது நாளாக தாமதம்: குழப்பங்கள் நீடிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில் அதனையொட்டி குழப்பமான சூழல் தொடர்ந்தும் நீடித்து வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றியபோதும் அமெரிக்க ஜனநாயக நடைமுறையை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடியதோடு ஆதாரமின்றி ‘வாக்குத் திருட்டு’ இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

எண்ணப்பட்டு வரும் வாக்குகளின் முடிவுகள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றிக்குச் சாதகமாகி வரும் சூழலில் தேர்தல் மோசடி பற்றி டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.

‘இந்த சூழலில் அவர்கள் தேர்தலை களவாட முயன்று வருகிறார்கள்’ என்று டிரம்ப் தெரிவித்தார். 17 நிமிடங்கள் உரையாற்றிய டிரம்ப் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அங்கிருந்து வெளியேறினார்.

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் பென்சில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் பதவியில் இருக்கும் டிரம்ப்புடன் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் கத்திமுனை போட்டியில் ஈடுபட்டிருப்பதோடு நவாடா மற்றும் அரிசோனாவிலும் அவர் குறுகிய வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதன் இறுதி முடிவுகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 270 தேர்தல் தொகுதி வாக்குகளை பெறுவதை பைடனுக்கு நெருங்கச் செய்துள்ளது. ஏற்கனவே பைடன் 264 தேர்தல் தொகுதிகளை வென்றிருப்பதாக கணித்திருக்கும் நிலையில் இந்த இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பு அவருக்கு அதிகமாக உள்ளது.

மறுபுறம் நேற்று மாலை வரையான முடிவுகளின்படி டிரம்ப் 214 தேர்தல் தொகுதிகளையே வென்றிருந்தார் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிரம்பின் வெற்றிக்கான கடைசி நம்பிக்கையாக இருக்கும் பென்சில்வேனியாவில் அவர் முன்னிலை வகித்தபோதும் அதன் வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது. அது அரை மில்லியனிலிருந்து 23,000க்குக் குறைந்துவிட்டது. இன்னும் எண்ணப்படவேண்டிய வாக்குகள் 550,000 ஆக இருந்தது.

அதேபோன்று ஜோர்ஜியாவில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் நேற்று பின்னேரம் வரை 2,000 மட்டுமே. இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் 15,000 இருந்தது. இதில் எண்ணப்படவிருந்த வாக்குகள் பெரும்பாலும் பைடனுக்கு சாதகமானவை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் அரிசோனாவில் 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை பெற்றிருந்ததோடு நவாடாலில் 11,000 வாக்குகளால் முன்னிலை பெற்றிருந்தார்.

பென்சில்வேனியா, அரிசோனா, ஜோர்ஜியா, விஸ்கான்சின், நவாடா, மிஷிகன் ஆகிய இந்த 6 போர்க்கள மாநிலங்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

இந்தக் குழுப்பமான சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அதிக அளவில் பதிவான அஞ்சல் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். அதுவே பைடனோ, கொரோனா தொற்று காரணமாக அஞ்சல் வழியாக வாக்குகளை செலுத்துமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி இருந்தார்.

இதுவே, அஞ்சல் வாக்குகள் பைடனுக்கு சாதகமாக இருக்கக் காரணமாக அமைந்திருக்கலாம் என டிரம்ப் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுவே பைடன் செய்துள்ள ட்வீட்டில் தனது பிரசாரம், ‘வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய தேர்தல் பாதுகாப்பு முயற்சி’ என பதிவிட்டுள்ளார். அத்தோடு, முழுமையான முடிவுகள் தெரியவரும் வரை மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இன்னும் இறுதி முடிவுகள் எப்போது வரும் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால், தேர்தல் தொகுதி வாக்குகளை வைத்து பார்த்தால், டொனால்ட் டிரம்பின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது

ஒரு வேளை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் சென்றால், முடிவுகள் தெரிய பல வாரங்கள் ஆகலாம் என்கின்ற பதற்ற நிலையே அங்கு காணப்படுகிறது.

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை