இஸ்ரேல் வான் தாக்குதலில் சிரியாவில் 3 படையினர் பலி

சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு எல்லைப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரானிய குத்ஸ் படை மற்றும் சிரிய ஆயுதப் படைகளுக்கு சொந்தமான இலக்குகள் மீது நேற்று அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கிடங்கு வசதி, தலைமையகங்கள் மற்றும் இராணுவ வளாகங்கள் இதன்போது இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு சிரியாவின் தரையில் இருந்து வானைத்தாக்கும் ஏவுகணை அமைப்பு தாக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலில் தமது படையினர் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்ததாக சிரியாவின் அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் 2011இல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் அந்நாட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிரிய அரசுக்கு ஆதரவளிக்கும் ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளை இலக்கு வைத்தே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை