துருக்கி ஆட்சிகவிழ்ப்பு முயற்சி: 337 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பிலான மிகப்பெரிய வழக்கு விசாரணையில் 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை பதவி கவிழ்க்க முயன்றதாக விமானப்படை விமானிகள் மற்றும் இராணுவ கட்டளைத் தளபதிகள் என சுமார் 500 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவர்கள் அங்காராவுக்கு அருகில் இருக்கும் அகின்சி விமானப்படைத் தளத்தில் இருந்து நேரடியாக இந்த சதிப்புரட்சியில் தொடர்புபட்டிருந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய மதத்தலைவரான பதுல்லாஹ் குலன் இந்த சதிப்புரட்சி முயற்சியில் மூளையாக செயற்பட்டதாக எர்துவான் குற்றம்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார்.

எர்துவான் விடுதி ஒன்றில் விடுமுறையில் இருந்தபோது 2016 ஜூலை மாதம் இடம்பெற்ற இந்த தோல்வியடைந்த சிதிப்புரட்சியின்போது 251 பேர் கொல்லப்பட்டு 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது எர்துவான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியில் ஈடுபடுவோருடன் போராடி அதனைத் தடுத்தனர். இது தொடர்கில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பமான வழக்கு விசாரணையில் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்தது உட்பட பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

Sat, 11/28/2020 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை