2021 வரவு -செலவுத்திட்டம்; கடற்றொழில் அபிவிருத்திக்கு 850 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

- மேலும் பல சலுகைகள் வழங்கவும் திட்டம்

கடற்றொழில்துறை அபிவிருத்திக்கென இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக சுமார் 850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசும்போது ஐரோப்பிய நாடுகளின் தரத்துக்கு இலங்கையின் குடாவெல்ல,பேருவளை, தெவினுவர, காலி ஆகிய பகுதிகளில் பசுமை மீன்பிடி துறைமுக வசதிகளை ஏற்படுத்துவதுடன் பருத்தித்துறை, ஒலுவில், கந்தர மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதுடன் கப்பரதொட்ட, தொடந்தூவ மீன்பிடி துறைமுகம் மற்றும் நங்கூரமிடும் துறைகளை அபிவிருத்தி செய்வதற்கும் நவீன வள்ளங்கள் மற்றும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்துவதற்கும் தற்போதுள்ள ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 2021 முதல் 23 ஆம் ஆண்டு காலத்துக்குள் மென்மேலும் அதிகரிப்பதற்கும் வரவு செலவு திட்டத்தினூடாக முன்மொழியப் பட்டுள்ளது.

அதேபோன்று கருவாடு, மாசி மற்றும் டின்மீன் உற்பத்திகளுக்கென எமது நாட்டில் காணப்படாத மீன் இனங்களை இறக்குமதி செய்வதற்குரிய வேலைத்திட்டத்தை இலகு படுத்துவதனூடாக தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்றுமதியின் போது அறவிடப்படும் வரியை உயர் மட்டத்தில் பேணவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை நுகர்வோருக்கு மற்றும் மீனவர் சமூகத்திற்கும் சாதகமான முறையில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான வர்த்தகமாக மாற்றுவதற்கு தேவையான முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கமைய சுமார் 500 மில்லியன் ரூபா மேலதிக நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கிராமிய மக்களின் வருவாய்க்கான வழிவகைகள் மற்றும் போஷாக்கை பெற்றுக்கொள்வதற்கான இலகுவான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்காக வருடாந்தம் சுமார் 50 மில்லியன் மீன் குஞ்சுகளை குளங்களிலும் நீர் தேக்கங்களிலும் விடுவதற்கும் இதனூடாக நன்னீர் மீன் உற்பத்தியை சுமார் 02 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் வரை அதிகரிப்பதற்கும் 150 மில்லியன் ரூபா நிதியை மேலதிகமாக ஒதுக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தினூடாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான மீன் இனங்கள், கடற் தாவரங்கள் என்பவற்றின் இறக்குமதியை அதிகரித்துக் கொள்வதற்காக தற்போதுள்ள நிர்வாக முறையை இலகுபடுத்தவும் tissue culture முறையின் ஊடாக கடல் தாவரங்களை மேம்படுத்தல், மீன் உணவுகளை பெறுவதற்கா வழிமுறைகளை இலகுபடுத்தல் மற்றும் விமான நிலைய வசதிகள் மற்றும் விமான வசதிகள் என்பவற்றை மேம்படுத்தவும் இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்டுள்ளது.

இறால், நண்டுகள் காப்பியா, மோதா, திலாப்பியா ரக மீன்களின் உற்பத்திக்கென மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சுற்றாடல் தரத்திற்கேற்ப அடிப்படை வசதிகளுடன் கூடிய வளர்ப்புப் பண்ணைகளை ஏற்படுத்துவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

Fri, 11/27/2020 - 10:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை