2019 A/L: பல்கலைக்கு தேர்ந்தெடுத்தமை தொடர்பில் அறிக்கை கோரினார் கல்வி அமைச்சர்

2019 A/L: பல்கலைக்கு தேர்ந்தெடுத்தமை தொடர்பில் அறிக்கை கோரினார் கல்வி அமைச்சர்-Education Minister Calls for a Report From UGC on Admission of AL 2019

ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை இடம்பெறும் பாடநெறி மாற்றத்தினை காரணமாகக் கொண்டு பழைய பாடத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள், புதிய பாடத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இரண்டு குழுக்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கையொன்றைக் கோரியிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விடயம் பற்றி வினவியபோது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை பாடநெறி மாற்றம் காரணமாக இம்முறை உயர்தர பரீட்சையில் முதல் தடவையாகத் தோற்றியவர்கள், இரண்டாவது தடவையாகத் தோற்றியவர்கள் என இரு தரப்பினரைத் தெரிவுசெய்யவேண்டியிருப்பதாகவும், இதில் 2019ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

“தற்பொழுது இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இதில் சில விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. உதாரணமாக, குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதிய மாணவர் 98 பேரும், முதலாவது தடவையாக எழுதிய 34 பேரும் வைத்திய பீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தாம் மருத்துவ பீடத்துக்கு தெரிவுசெய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இரண்டாவது தடவை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை, வேறு பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை” என திஸாநாயக்க தெரிவித்தார்.

உதாரணமாக இம்முறை குருணாகல் மாவட்டத்தில் முதல் தடவை தோற்றிய குழுவில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 37வது இடத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னணியில் தெரிவுசெய்யப்பட்டாலும் மருத்துவ பீடத்துக்குச் செல்லமுடியும் என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்குத் செல்லாமல் இருக்கின்றார். எனினும், இரண்டாவது தடவையாக எழுதிய 34 பேர் மாத்திரமே வைத்திய பீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயர்ந்த புள்ளிகளைப் பெற்றமையால் மருத்துவ பீடத்துக்கு மாத்திரம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இந்த மாணவர்கள் எந்தவொரு பாடநெறியிலும் கலந்துகொள்ளாது உளரீதியான அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில் முதல் தடவையாக எழுதிய குழுவினர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவே இதுவிடயத்தில் தலையீடு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இது தொடர்பில் 2012ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் காணப்படுவதாகவும் இதற்கு அமைய இந்தப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கையொன்றை கோரியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Wed, 11/04/2020 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை