கொழும்பு மாவட்ட மக்களுக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும்

பாராளுமன்றத்தில் சஜித் பி​ேரமதாச கோரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியான கரிசனை செலுத்த வேண்டுமென்பதுடன், 5,000 ரூபா கொடுப்பனவு போதாது. 20ஆயிரம் ரூபா கொடுப்பனவும் அல்லது அவர்கள் வாழ்வதற்கு மோதுமான கொடுப்பனவை அரசாங்கம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டு கோள் விடுத்தார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொரோனா வைரஸ் பரவலால் மேல் மாகாணத்தில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டமே அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் மருதானை, முகத்துவாரம், மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, புளூமெண்டால் உட்பட பல பிரதேசங்களும் மாடி வீட்டுத் திட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை, போலியகொடை, ராகம, களனி உட்பட பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட மாவட்டமாக கொழும்பு காணப்படுகிறது.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் மூன்று இலட்சம் பேர்வரை வசிக்கின்றனர். இவர்களில் 60 சதவீதமானவர்கள் அன்றாட வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நபர்களாகும். அதிகமானவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாகும்.

ஒரு மாத காலமாக இந்த பிரதேசங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வருமான வழிமூலங்கள் இழக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ரூபா உணவு பொதியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், இந்த வேலைத்திட்டத்தில் தகுதியுடைய அனைத்து குடும்பங்களுக்கும் இதன் பிரதிபலன் கிடைக்கவில்லை. முகத்துவாரம், அளுத்மாவத்தை, இப்பாவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களால் கொவிட் நெருக்கடியையும் தாண்டி போராட்டத்தில் ஈடுட்டதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

கிராம சேவகர்கள் மூலம் வழங்கப்படுகின்ற 5,000 ரூபா கொடுப்பனவு நாளொன்றுக்கு 100 பேருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேகமாக கொடுப்பனவை வழங்குவதற்கான வசதிகள் குறைவாகவும் உள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவில் 10ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையினர் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே கொடுப்பனவை வழங்குவதற்கான வசதிகள் போதாதுள்ளது.

கொடுப்பனவை வழங்கும் பொறிமுறைக்கு அப்பால் ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு ஒருபோதும் போதுமானதாக அமையாது. குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 20ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு குறைந்தப்பட்சம் மாதமொன்றுக்கு 15ஆயிரம் ரூபாவேனும் அன்றாட செலவுகளுக்கு அவசியமாகும். அதற்கு அப்பால் சமகால அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தினம் தினம் உயர்வடைந்துச் செல்வதால் மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் காணப்படும் நிலைமையால் மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. ஏனைய மாவட்டங்களின் நிலையும் இதனைவிட நல்லதல்ல. இந்த பின்புலத்தில் இதனை தேசிய முக்கியவம் வாய்ந்த காரணியாக கருதி அரசாங்கம் செயற்பட வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 11/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை