அமெரிக்காவில் கொவிட்–19 தொற்று உயிரிழப்பு கால் மில்லியனாக உயர்வு

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அண்மை வாரங்களில் மரண எண்ணிக்கையும் அங்கு கணிசமாகக் கூடியுள்ளது.

அமெரிக்காவில் கால் மில்லியனுக்கும் அதிகமான கொவிட்–19 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகப் புள்ளி விபரப்படி கடந்த புதன்கிழமை மாத்திரம் குறைந்தது 1,700 பேர் நோய்ப்பரவலால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில், புதனன்று பதிவான மரண எண்ணிக்கையே மிக அதிகமானது.

இதன்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 250,029 ஆக அதிகரித்துள்ளது. இது உலகின் வேறு எந்த நாட்டை விடவும் அதிக எண்ணிக்கையாகும்.

ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனப் புள்ளி விபரப்படி அமெரிக்காவில் குறைந்தது 20 மாநிலங்களில் கொவிட்–19 மரணங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சுமார் 41 மாநிலங்களில் நாள் ஒன்றுக்குப் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவில் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நோய்த் தொற்றின் புதிய மையமாக மாறி இருக்கும் நியுயோர்க் நகரில் இன்று முதல் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் நோய்த் தொற்று அதிகரித்தபோதும் நாட்டின சில பகுதிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது மற்றும் இரண்டாவது அலை பாதிப்புகளில் இருந்து தப்பிய மிட்வெஸ் போன்ற பிராந்தியங்களிலும் நோய்த் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இரு தடுப்பு மருந்துகளின் சோதனை முடிவுகள் சாதகமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை