மாணவர்களின் கோரிக்ைகயை ஏற்று பாடசாலைகளை விரைவாக ஆரம்பித்தோம்

 கொழும்பு இந்துக்கல்லூரி பரிசளிப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

கொவிட் -- 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (30) தெரிவித்தார். கொழும்பு, இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்துக் கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இதன்போது பிரதமரினால் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், பிரதமருக்கு 2019ஆம் ஆண்டுக்கான கல்லூரி மலரும், நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

'இக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் நான் பெருமகிழ்சியடைகின்றேன். இக்கல்லூரி, தமிழ் மக்களின் மொழி பண்பாட்டு அம்சங்களைக்கொண்டு இயங்கும் ஒரு தேசிய பாடசாலை என்பதுடன் சிறந்த கல்விமான்களையும் சமூகப்பொறுப்புள்ள மாணவர்களையும் எதிர்காலத்தின் நற்பிரஜைகளையும் இக்கல்லூரி தந்துள்ளது. இந்த மாணவர்களே நாட்டின் எதிர்கால தலைவர்களாவர்.

1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி ஆண்கள் பாடசாலையாக மிளிர்வதுடன் தமிழ், ஆங்கில மொழிமூலமான கற்கைநெறிச் செயற்பாட்டைக்கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன. 'ஒரு பாடசாலை திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்' என்பது பழமொழி.

நல்ல மாணவர்களை உருவாக்குதல் பாடசாலைகளின் பணியாவதுடன், அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும்.

'கற்றாங்கு ஒழுகுக' என்ற குறிக்கோளுடன் இயங்கும் இக் கல்லூரியானது ஒழுக்கம் மற்றும் கல்வி நிலையில் மேன்மைபெற்ற பல மேதைகளை உருவாக்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றமையை நான் அறிவேன்.

நாட்டின் வளம் என்பது நல்ல மாணவர்களை உருவாக்கி கல்வியில் முன்னிலையில் இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து சுபீட்சமான வாழ்வைக் கொண்டாடும் சமூகச்சூழலை ஏற்படுத்தி முழு நாட்டையும் செல்வச் செழிப்புடன் ஆக்கும் ஒருபெரும் முயற்சியாகும். கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எக்காரணியும் ஏற்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை.

கல்விச் செல்வமே அழியாததும் பிறர் கொள்ளை கொண்டு போக முடியாததுமாகும். கல்வியை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாட்டிற்குரிய நற்பிரஜைகளை உருவாக்கும் உன்னத சேவையை ஆற்றுகின்றன. அந்தவகையில் கொழும்பு இந்துக்கல்லூரியின் மூலமும் மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்பி நாட்டின் அபிவிருத்தியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். போரின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களை எமது அரசாங்கம் அன்று கொண்டுவந்தது. இன்று மக்கள் மீண்டும் எம்மை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்களின் ஆணையின் மூலம் மேலும் பல நிலையான அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ள எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்விச் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி எம் நாட்டின் கல்வி வளர்ச்சியை மேன்நிலைக்கு கொண்டுசெல்வதே எமது இலட்சியமாகும்.

இன்று கோவிட் - 19 பிரச்சினையை உலகளாவிய சவாலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இப்பெரும் சவாலை கட்டுக்குள் வைத்துள்ளோம். இந்த பிரச்சினைகளினால் பாடசாலை பிள்ளைகளாகிய உங்களின் கல்வி பாதிப்படையக்கூடாது. கொரோனா நிலைமை காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களுக்கு செவிமடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்போது பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு மாணவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப முடங்கிக்கிடந்த நாட்டின் நிலைமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து பாடசாலை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் வெற்றிகண்டோம். பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது.

கல்வியில் போன்றே மாணவர்கள் விளையாட்டுத்துறையிலும் ஈடுபட வேண்டும். உங்களை போன்றே வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை அறிய முடிந்தது.

எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கும் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று இக்கல்லூரி, ஏனைய பிரதேச பாடசாலைகளுக்கு முன் உதாரணமான பாடசாலையாக விளங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றி பிரதமர், 'என் அன்பார்ந்த மாணவர்களே, நீங்கள் தான் எமது நாட்டின் எதிர்கால தலைவர்கள். உங்கள் அனைவரையும் இன்று நான் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

இச் சந்தர்ப்பத்தில், இந்து மதகுருமார்களான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி எஸ்.சந்தீர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்துக் கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Thu, 10/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை