வெள்ளை மாளிகைக்குள் கொரோனா பரவல் தீவிரம்

வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் மற்றும் மூத்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவர்களுக்கு இடையே வைரஸ் பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக சுய தனிமைப்படுத்தலில் இருந்த மில்லருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த செவ்வாயன்று உறுதி செய்யப்பட்டது. கடலோரக் காவல்படை அதிகாரியான அட்மிரல் சார்ல்ஸ் ரெய்னுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து மூத்த ஜெனரல் மார்க் மில்லி மற்றும் ஏனைய இராணுவம் தளபதிகளும் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற டிரம்பின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கே தற்போது நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வைரஸ் தொற்றை வேகமாக பரவச் செய்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடையோருக்கு நோய்ப்பரவல் “கட்டுக்கடங்காமல்” இருக்கலாம் என்று வொஷிங்டன் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப்புக்கும், அவருடைய மனைவிக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அண்மையில், ஜனாதிபதியின் இராணுவ உதவியாளர், வாகன ஓட்டுநர் ஆகியோரும் நோய்வாய்ப்பட்டனர். வெள்ளை மாளிகையில் பணிபுரிவோர் மூலம், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் போன்றோருக்கு வைரஸ் தொற்றலாம் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் டிரம்ப் மூன்று நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு கடந்த திங்கட்கிழமை மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை