எச்சந்தர்ப்பத்திலும் நான் புகழ் பாடவில்லை

ரிஷாட் பதியுதீன் தொடர்பில்

பாதுகாப்புச் செயலாளர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தொடர்பில் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புகழ் பாடவில்லை. அவ்வாறு புகழ் பாடும் தேவை தனக்கு இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அரசநிகழ்வொன்றில் தான் ஆற்றிய உரை திரிபுபடுத்தப்பட்டு சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அது சமூக ஊடகங்களில் தவறான முறையில் பரப்பப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தனது உரையில் தற்போதைய வடமாகாண ஆளுநர்  திருமதி பி.எம். எஸ். சார்ல்ஸையே பாராட்டி பேசியதாகவும் தனது முழுமையான உரையின் ஒருசில வார்த்தைகளை பயன்படுத்தி திரிவுபடுத்தப்பட்ட செய்தியைவெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தான் சட்ட ஆலோசனை பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் ஆற்றியஉரை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் விளக்கமளிக்கையில் :-

வவுனியா மாவட்டசெயலகத்தின் புதியகேட்போர் கூடம் திறப்புவிழா 2020 ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதிநடைபெற்றது. உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டுஅலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த அரச நிகழ்வில் குறித்த அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நான் கலந்துகொண்டதுடன் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் எனக்கும் உரை வழங்கப்பட்டிருந்தது. இங்குஉரையாற்றிய நான், மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு தகுதிகாண் அதிகாரியாக இருந்தபோது வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வவுனியா அரசாங்க அதிபராக இருந்து ஆற்றிய சேவைகளை பலவிதத்தில் பாராட்டினேன். அத்துடன் அப்போதைய புனர்வாழ்வு அமைச்சராக ரிஷாட் பதியுதீனும்; இருந்து சேவையாற்றினர் என்று ஒருவார்த்தையே கூறியிருந்தேன். எனது உரையின் முழுவதையும் ஒளிபரப்பாமல் ஒருசில வார்த்தைகளை மாத்திரம் எடுத்து அவற்றை சிலர் திட்டமிட்டஅடிப்படையில் திரிவுபடுத்தி செய்தியாக வெளியிட்டுள்ளனர். பின்னர் அது சமூக ஊடகங்கள் ஊடாக தவறான முறையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.

திருமதிசார்ள்ஸ் உண்மையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டமை நாங்கள் அறிவோம். அதனாலேயே அவரது சேவையை எனது உரையின் போது பாராட்டி பேசினேன். மாறாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராட்டிபேசும் எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் வவுனியா நிகழ்வின் போது ஆற்றியஉரையின் முழுமையான கானொலி இந்தசெய்தியாளர் மாநாட்டின் போது காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

ஸாதிக் ஷிஹான்

Tue, 10/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை