கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்பெயினில் அவசரநிலை அமுல்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கும் ஸ்பெயின் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளது.

ஞாயிறு இரவு அமுலுக்கு வந்த இந்த ஊரடங்கு இரவு 11 தொடக்கம் காலை 6.00 மணி வரை இருக்கும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடவடிக்கையின்படி பிராந்தியங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்க உள்ளூர் நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளை 15 நாட்களில் இருந்து ஆறு மாதங்கள் வரை நீடிப்பதற்கு பாராளுமன்றத்தை கோரவிருப்பதாகவும் சான்செஸ் தெரிவித்தார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் முதல் அலை கொரோனா தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருந்த ஸ்பெயினில் அப்போது கடுமையான முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்று ஸ்பெயினிலும் இரண்டாவது அலை பாதிப்பு மோசமடைந்துள்ளது.

இத்தாலியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொற்றுச் சம்பவங்கள் நிலையாக அதிகரித்து வருவது நாட்டின் சுகாதார சேவைக்கு பெரும் சுமையாகி இருப்பதாக இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் நேற்று முதல் நீச்சல் தடாகங்கள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டன.

மறுபுறம் பிரான்சில் தினசரி நோய்த்தொற்று சம்பவங்கள் 52,010ஆக உச்சம் கண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் உலகளவில் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் சாதனை எண்ணிக்கையான 465,319 ஆக பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை